'ரோஜ்கர் மேளா' வேலைவாய்ப்பு திருவிழா...3-ம் கட்டமாக பணி ஆணை வழங்கிய பிரதமர்!

'ரோஜ்கர் மேளா' வேலைவாய்ப்பு திருவிழா...3-ம் கட்டமாக பணி ஆணை வழங்கிய பிரதமர்!

வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞர்கள், நாள்தோறும் தங்களது திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பணி ஆணைகளை வழங்கினார் பிரதமர் :

மத்திய அரசின் 'ரோஜ்கர் மேளா' திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக கடந்த ஆண்டு அக்டோர் மாதம் 75 ஆயிரம் இளைஞர்களுக்கும், பின்னர், நவம்பர் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொறியாளர், மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட பணிகளுக்காக 71 ஆயிரம் இளைஞர்களுக்கும் பிரதமர் பணி ஆணைகளை வழங்கினார். இந்நிலையில், மூன்றாம் கட்டமாக நாடு முழுவதும் சுமாா் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமா் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் வழங்கினார். 

அப்போது பேசிய பிரதமர், பணி நியமனக் கடிதம் பெற்றவர்களுக்கு புதிய வாழ்க்கைப் பயணம் தொடங்குவதாக குறிப்பிட்டார். இளைஞர்கள் நாள்தோறும் புதிது புதிதாக கற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். வாழ்க்கையில் முன்னேற திறன்களை மேம்படுத்திக் கொண்டிருப்பது அவசியம் என்ற பிரதமர் நரேந்திர மோடி, புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் பெருமிதம் தெரிவித்தார். 

இதையும் படிக்க : இந்தி இல்லாமல் வாழ முடியுமா...? பிரபல இயக்குனர் கேள்வி... !

நாடு முழுவதும் 45 இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இளைஞர்களுக்கு மத்திய அரசு பணிக்கான ஆணைகள் வழங்கப்பட்டன. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மத்திய அரசின் பல்வேறு துறைகளில் புதியதாக இணைய உள்ள 85 பேருக்கு பணியாணைகளை வழங்கினார். 

இதேபோல், திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு 25 பேருக்கு பணிக்கான கடிதங்களை வழங்கினார். கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் நாராயணசாமி 96 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.