73-வது குடியரசு தின விழா : இன்று கோலாகல கொண்டாட்டம் !!

நாட்டில் 73-வது குடியரசு தினம் கொண்டாடப்படுவதையொட்டி, டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

73-வது குடியரசு தின விழா : இன்று கோலாகல கொண்டாட்டம் !!

இந்தியாவில் 73வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட உள்ளது.  டெல்லி ராஜ்பாதையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செய்கிறார். இதனை முன்னிட்டு டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.  

காலை பத்தரை மணியளவில் தொடங்கி, நண்பகல் 12 மணிக்கு குடியரசு தின விழா நிறைவடைகிறது. விழா தொடங்கும் முன்பாக, தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். விஜய் சவுக் பகுதியில் இருந்து ராஜபாதை வழியாக தேசிய மைதானத்தை முப்படைகளின் அணிவகுப்பு சென்றடையும். ராணுவ பலத்தை காட்டும் வகையில் அதிநவீன பீரங்கிகள், டாங்கிகள், ஆகாஷ் ஏவுகணைகள் அணிவகுப்பில் இடம்பெறும். மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர், அதிநவீன ட்ரோன்கள் உள்ளிட்ட நவீன போர் விமானங்கள் கொண்ட விமானப்படை சாகசமும் நடைபெற உள்ளன.

இந்நிலையில் டெல்லி முழுவதும் கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் நிலவுவதாக உளவுப்பிரிவு தகவல் அளித்துள்ள நிலையில், எந்தவித அசம்பாவிதங்கள் நடந்துவிடக்கூடாது என்பதற்காக பாதுகாப்புப்படை வீரர்களும், போலீசாரும் எந்நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.