கேரளாவில் முழு அடைப்பு.. அரசு சொத்துகளை சேதமாக்கும் போராட்டக்காரர்கள்..!

தனியார், பொது சொத்துகளுக்கு சேதம் வராமல் போலீசார் தடுக்க வேண்டும் - நீதிமன்றம்..!

கேரளாவில் முழு அடைப்பு.. அரசு சொத்துகளை சேதமாக்கும் போராட்டக்காரர்கள்..!

என்.ஐ.ஏ சோதனை:

தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதாகக் கூறி, நாடு தழுவிய அளவில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர்களின் வீடுகளில், என்ஐ.ஏ. சோதனை மேற்கொண்டது. இதில், அந்த அமைப்பின் தலைவர்கள் உட்பட சுமார் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கேரளாவில் முழு அடைப்பு:

மத்திய அரசின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில், இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

வாகனங்களுக்கு தீ:

இருப்பினும், கொல்லம் உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் சாலைகளில் சென்ற ஆட்டோக்கள், அரசுப் பேருந்துகள் மற்றும் கார்களை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். ஏராளமான வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. 

தர்ணா போராட்டம்:

மேலும், சாலைகளில் அமர்ந்து தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது என்.ஐ.ஏ. மற்றும் மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். ஒரு சில பகுதிகளில் அந்த அமைப்பினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

வெறிச்சோடி காணப்படும் சாலைகள்:

இதேபோல், திருவனந்தபுரத்தில் ஆட்டோ ரிக்‌ஷா, கார் உள்ளிட்ட வாகனங்களை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கியதால் பதற்றம் நிலவுகிறது. சாலையில் செல்லும் வாகனங்களை தீயிட்டு கொளுத்தி, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். கடைகள் அடைக்கப்பட்டுள்ளதாலும், வாகனங்கள் செல்லாததாலும், கேரளா முழுவதும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. 

நடவடிக்கை வேண்டும்:

இந்த நிலையில், வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளிக்காத அரசு மற்றும் பொது/ தனியார் சொத்துக்களுக்கு எவ்வித சேதாரமும் ஏற்பாடாமல் தடுக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.