ஆயிரம் ரூபாயை நெருங்கியது சமையல் எரிவாயு விலை..!

விறகு அடுப்பு கால முன்னேற்றத்திற்கு பிறகு, சிலிண்டரை தான் மக்கள் பெருமளவில் பயன்படுத்துகின்றனர். வீடு கட்டும் போதே சிலிண்டர் வைக்கும் வடிவமைப்பில் தான் சமையலறையை கட்டுகின்றனர். அத்தகைய சிலிண்டர் விலையோ இன்று வானத்தை எட்டியுள்ளது.

ஆயிரம் ரூபாயை   நெருங்கியது சமையல் எரிவாயு விலை..!

பெண்களின் வருமானத்தில் வாழ்க்கையை கடக்கும் நிலை இன்றும் தமிழ்நாட்டில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆம், தினக்கூலி வேலைக்கு செல்லும் தாய்மார்கள் பலர், தனது இரண்டு நாட்கள் கூலியை சிலிண்டருக்காக ஒதுக்கும் நிலையை இன்றைய சிலிண்டர் விலை அதிகரிப்பு உருவாக்கியுள்ளது. பொதுவாக சிலிண்டர் விலை, பெட்ரோல் டீசல் விலையை கச்சா எண்ணெயின் சந்தை விலைக்கேற்ப எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.அதன்படி பெட்ரோல் டீசல் விலை நாள்தோறும் மாற்றியமைக்கப்படுகிறது. எரிவாயு சிலிண்டரின் விலையை மாதந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வந்தன.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரக்கூடிய சூழலில் கச்சா எண்ணெயின் விலை உயரும் என்று நிபுணர்கள் தெரிவித்து வந்த நிலையில் தொடர்ந்து கச்சா எண்ணெயின் விலை ஏறி வருகிறது. இந்த நிலையில் பெட்ரோல் டீசலின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 5 மாநில தேர்தல் முடிவில் பாஜகவின் வெற்றியை அடுத்து பெட்ரோல் டீசலின் விலை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது பெட்ரோல் டீசல் அதேபோல எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

2010ம் ஆண்டு ஜீலை மாதத்தில் சிலிண்டரின் விலை 352 ரூபாயாக இருந்தது. அதன்பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக விலை உயர்ந்து 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 594 ஆக விலை உயர்ந்தது. அதனை தொடர்ந்து விலை ஏறுமுகத்திலையே காணப்பட்டது. இடையிடையில் சற்று விலை குறைந்து இருந்தாலும் கடந்த மார்ச் மாதம் சிலிண்டரின் விலை 965 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்த விலையே சிலிண்டரின் அதிகபட்ச விலையாக கருதப்படுகிறது. வீட்டிற்கு சிலிண்டர் கொண்டுவரும் நபருக்கு கொடுக்கும் டிப்ஸ் எல்லாம் சேர்த்தால் ஆயிரம் ரூபாயை தொடுகிறது ஒரு சிலிண்டரின் விலை. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் பெரும் வேதனைக்கு ஆளாகின்றனர். வாழ்வாதாரத்தை இழந்து வாழக்கூடிய பொதுமக்கள் சிலிண்டர் விலை உயர்வால் அடுப்பை வைத்து சமைக்கும் நிலை மாற வாய்ப்புள்ளது. இதற்கான நடவடிக்கையை அரசு உடனடியாக எடுத்து விலையைக் குறைக்க  வேண்டும் என்பதே இல்லத்தரசிகள் வேண்டுகோளாக உள்ளது...