ஹேக்கர்கள் வசமிருந்து மீட்பு..! டெல்லி எய்ம்ஸில் நடந்தது என்ன?

டெல்லி எய்மஸ் மருத்துவமனையின் இணையதளம் ஹேக்கர்கள் வசமிருந்து மீட்கப்பட்டுவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு.
இணையதளம் முடக்கம்:
டெல்லியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை நாட்டின் மிகப்பெரிய மருத்துவமனையாக உள்ளது. இதில் நோயாளிகளுக்கு பதிவுச்சீட்டு உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் தனித்துவமான இணையதளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 23-ம் தேதி மருத்துவமனையின் இணையதளம் திடீரென முடக்கப்பட்டது. இதனால் நோயாளிகளுக்கு டோக்கன் தருவதில் தொடங்கி, பலதரப்பட்ட நிர்வாகப் பணிகள் முடங்கின. கணினி சீட்டுகள் வழங்க முடியாமல் போனதால் அனைத்து கவுன்டர்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
விமர்சனங்கள்:
இதையடுத்து விசாரணை மேற்கொண்ட மென்பொருள் மற்றும் சைபர் கிரைம் காவல்துறையினர், இணையதளம் முடக்கப்பட்டதுடன் சர்வர் ஹேக் செய்யப்பட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து, ஹேக் செய்த மர்ம நபர்களைத் தேடு பணியில் ஈடுபட்டனர். இதனால் கடந்த 7 நாட்களில் மட்டும் 5 கோடி நோயாளிகள் முறையாக டோக்கன் பெற முடியாமல் தவித்தனர். இது குறித்து காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் விமர்சித்தனர்.
இதையும் படிக்க: கணவரை 10 பாகங்களாக்கி பிரிட்ஜில் வைத்த மனைவி..! தலைநகரை அதிர வைத்த சம்பவம்
பணயம்:
இதற்கிடையில், சர்வரை ஹேக் செய்த மர்ம நபர்கள் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள கிரிப்டோ கரென்சியை பணையமாக கேட்டதாகவும் தகவல்கள் வெளியானதால் பதற்றம் நிலவியது. ஆனால் தொகை கேட்கப்பட்டது குறித்து மறுத்த காவல்துறை, நேற்று இரவு சர்வரையும் இணையதளத்தையும் மீட்டனர்.
இணையதளம் மீட்பு:
இணையதளம் மீட்கப்பட்டது குறித்த மருத்துவமனையின் அறிக்கையில், சர்வரில் இருந்து நோயாளிகளின் தகவல்கள் பத்திரமாக தரவிறக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் பழைய முறைப்படி கணினி டோக்கன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஹேக் செய்த மர்ம நபர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.