காங்கிரஸ் கட்சியின் நிரந்தர தலைவர் பதவிக்கு அடுத்தாண்டு தேர்தல்...

காங்கிரஸ் கட்சியின்  நிரந்தர தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல், அடுத்தாண்டு செப்டம்பரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் நிரந்தர தலைவர் பதவிக்கு அடுத்தாண்டு தேர்தல்...

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், தலைவர் சோனியா காந்தி தலைமையில் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், சுர்ஜீவாலா, குலாம் நபி ஆசாத் மற்றும் மூத்த உறுப்பினர்கள் என 53க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், லக்கிம்பூர் கேரி வன்முறை சம்பவம், 5 மாநில சட்டசபை தேர்தல், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது கட்சியின் நிரந்தர தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலானது அடுத்தாண்டு செப்டம்பரில் நடைபெறும் என ஒரு மனதாக முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. 

முன்னதாக, துவக்க உரையாற்றிய சோனியா காந்தி, கட்சியில் ஒட்டுமொத்த கமிட்டியிலும் மறுமலர்ச்சியை விரும்புவதாக கூறினார். அதற்கு கட்சியின் நலனை முன்நிறுத்தி அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவது அவசியம் எனவும் கூறினார். கட்சி உறுப்பினர்களிடையே சுய கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கமும் அவசியம் எனவும் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், கட்சியில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என தாம் எப்போதும் ஊக்குவித்து வந்ததாக கூறினார். ஆனால் சிலர் ஊடகம் வாயிலாக தன்னிடம் பேசுவதாகவும், அதற்கு எவ்வித அவசியமும் இல்லை எனவும் கூறினார். நேர்மையான முறையில் விவாதம் நடைபெற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.