தலைநகரில் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்!

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். 

தலைநகரில் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த நவம்பர் மாதம் முதல் போராட்டங்கள் நடந்து வருகிறது. பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கு இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படவில்லை. புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றே தீர வேண்டும் என விவசாயிகள் ஒரே பிடியாக இருக்கும் அதே வேளையில் விவசாயிகளின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்காமல் உள்ளது. 

இந்நிலையில், தினந்தோறும் 200 போராட்டக்காரர்கள் சிங்கு எல்லையில் இருந்து ஜந்தர் மந்தர் செல்ல உள்ளதாக விவசாயிகள் தெரிவித்திருந்தனர். அந்தவகையில், பல்வேறு பகுதிகளில் இருந்து டெல்லி சிங்கு எல்லையில் கூடும் விவசாயிகள் அங்கிருந்து ஜந்தர் மந்தருக்கு பேரணியாக சென்று ஆர்பாட்டத்தை தொடங்கினர். விவசாயிகளின் இந்த போராட்டத்தையொட்டி ஜந்தர் மந்தரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.