நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு..! மத்திய அரசு விளக்கம்..!

நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு..! மத்திய அரசு விளக்கம்..!

எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தி உள்ளதால், பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் எரிபொருளுக்காக மக்கள் நீண்ட நேரம் பெட்ரோல் பங்குகளில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த தகவல் நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தியானது, தேவைக்கு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசலின் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது உண்மை தான் என ஒப்புக்கொண்டுள்ள மத்திய அரசு, சில பகுதிகளில் சில்லறை விற்பனை நிலையங்களில் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் வந்ததே, தாமதத்திற்கு வழிவகுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும், நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தியானது, தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு போதிய அளவில் உள்ளதாகவும், இதுவரை இல்லாத அளவிற்கு தேவை அதிகரித்திருப்பதால், உள்ளூர் மட்டத்தில் சில சிக்கல்களை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் , இந்த பிரச்சினைகளை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள் தயாராகி வருவதாகவும், எண்ணெய் விநியோக நிறுவனங்கள், இந்த கூடுதல் தேவையை பூர்த்தி செய்ய போதுமான அளவு பெட்ரோல் மற்றும் டீசல் கிடைப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.