கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முழு ஊரடங்கு.!!

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முழு ஊரடங்கு.!!

கேரளாவில் தொடர்ந்து தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி வருகிறது. தனிமைப்படுத்தலை மீறுவதே கொரோனா அதிகரிப்புக்கு காரணம் என மாநில அரசு குற்றம்சாட்டுகிறது.

கேரளாவில் கொரோனா 2-வது அலை கட்டுக்கடங்காமல் உள்ளது. இந்தநிலையில் கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  

இது தொடர்பாக  மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், கேரள மாநில தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், இந்தியாவிலேயே கேரள மாநிலத்தில் தான் கொரோனா மிகவும் உச்சத்தில் உள்ளது என்றும், எனவே, மாநிலத்தில் கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே கொரோனா பரவலை கட்டுப்படுத்த, இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.தேவையின்றி இயங்கும் வாகனங்கள், நடமாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாநில அரசு தொற்றினை கட்டுப்படுத்த இரவு நேர முழு ஊரடங்கினை நாளை இரவு முதல் அமல்படுத்த உள்ளது. இரவு பத்து மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என மாநில முதலமைச்சர் பிரனாயி விஜயன் தெரிவித்துள்ளார்.