நமீபியா சிறுத்தைகளே நீங்கள் நலமா?!!!

நமீபியா சிறுத்தைகளே நீங்கள் நலமா?!!!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று எட்டு சிறுத்தைகள் நமீபியாவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.  எழுபது ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் சிறுத்தைகள் இனம் முற்றிலுமாக அழிந்துவிட்டன.  

முற்றிலும் அழிந்துவிட்ட சிறுத்தைகளை மீண்டும் கொண்டு வர இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அவற்றை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கத்தில் மீண்டும் நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு மத்திய பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள குனோ தேசிய பூங்காவில் எட்டு சிறுத்தைகள் விடுவிக்கப்பட்டுள்ளன. 

ஆரோக்கியமாக இருக்கின்றனவா?:

நமீபியாவில் இருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட சிறுத்தைகள் குனோ தேசிய பூங்காவில் இப்போது நன்றாக உலாவ ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சிறுத்தைகளை சிறப்பு மருத்துவர்கள் குழு எப்போதும் கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அவைகளின் உடல்நிலை தீவிரமாக பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர் சிறப்பு மருத்துவக் குழுவினர்.  

சிறுத்தைகள் அனைத்தும் தங்கள் புதிய வாழ்விடத்தை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து, ஆரோக்கியமாக இருப்பதாக அவற்றை கண்காணித்து ஆய்வு செய்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  எட்டு சிறுத்தைகளும்  தனித்தனியாக அடைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன எனவும் பூங்கா பராமரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.  

இந்தியா மற்றும் நமீபியாவைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் சிறுத்தைகளை உன்னிப்பாகக் கண்காணித்து, ஒரு மாத காலம் தனிமைப்படுத்தி அந்த காலத்தில் அவர்களுக்கு எருமை இறைச்சியைக் கொடுக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் தெரிந்துகொள்க: இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கு ஒத்துப்போகுமா நமீபியா சிறுத்தைகள்?!!

மீண்டும்  சாப்பிட்ட சிறுத்தைகள்:

குனோ தேசிய பூங்காவின் இயக்குனர் உத்தம் குமார் சர்மா கூறுகையில், சிறுத்தைகள் மூன்று நாட்களுக்குப் பிறகு சாப்பிடுகின்றன எனவும் ஒருமுறை வேட்டையாடி, அதை சாப்பிட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, சிறுத்தை அதை மீண்டும் சாப்பிடுகிறது எனவும் கூறியுள்ளார்.  

மேலும், சிறுத்தைகள் தினமும் சாப்பிடுவதில்லை எனவும் இரண்டு நாட்களுக்கு முன்பு நமீபியாவில் இருந்து இந்தியா கொண்டு வருவதற்கும் முன் அவைகளுக்கு எருமை இறைச்சி வழங்கப்பட்டது எனவும் அதன்பிறகு இன்று மீண்டும் அவை சாப்பிடுவதாகவும் கூறியுள்ளார்.

புதிய சூழலில் சிறுத்தைகள்:

இந்தியாவிற்கு வந்த அன்று சிறுத்தைகள் பயத்துடன் காணப்பட்டன இப்போது எப்படி இருக்கின்றன என்று கேட்டதற்கு, ”இப்போது சிறுத்தைகள் சுறுசுறுப்பாக உள்ளன. அவற்றின் உடல்நிலை நன்றாக உள்ளது” என்று சர்மா கூறியுள்ளார். நமீபியாவில் இருந்ததை போல தொடர்ந்து வாழ அவை முயற்சிக்கின்றன.  அவைகளின் தங்கள் அன்றாட வழக்கத்தை தொடர்ந்து செய்து வருகின்றன. அவைகள் அங்கும் இங்கும் அலைந்து திரிகின்றன. உட்கார்ந்து, தண்ணீர் குடிக்கின்றன.புதிய சூழலை அறிந்து அதற்கு ஏற்ப மாற முயற்சி செய்கின்றன” என சர்மா கூறியுள்ளார்.

பெயரில் மாற்றமில்லை:

சிறுத்தைகளுக்கு நமீபியாவில் இருந்து பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும், அவற்றின் பெயர்களை மாற்றவில்லை என்றும் சர்மா கூறியுள்ளார். அவைகளின் பெயர்களை மாற்றுவது குறித்து தற்போது நாங்கள் பரிசீலிக்கவில்லை எனவும் சர்மா தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ’அண்ணா மாடல்’ vs ’மோடி மாடல்’