பெருந்தொற்று மேலாண்மையில் இந்தியா சிறப்பாக செயல்பட்டது : குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!!

பெருந்தொற்று மேலாண்மையில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெருமிதம் கொண்டுள்ளார்.

பெருந்தொற்று மேலாண்மையில் இந்தியா சிறப்பாக செயல்பட்டது : குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!!

நாட்டின் 73வது குடியரசுத் தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாடு அழைக்கும் போது நாட்டுக்காக சேவை செய்வது அடிப்படை கடமை என்பது போல தடுப்பூசி பிரச்சாரத்தில் கிடைத்த வெற்றி நாட்டின் மக்களையே சாரும் என தெரிவித்தார்.

ஆக்கப்பூர்வமான பணிகளை நாட்டுக்கு செய்ய வேண்டும் என்ற காந்தியின் போதனைக்கு தடுப்பூசி பிரச்சாரம் போன்றவை பொருத்தமானதாக இருக்கும் என கூறிய அவர், கொரோனா தொற்று காலம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

சமீப காலமாக பல்வேறு துறைகள் தங்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி தேசத்தை பலப்படுத்தியுள்ளதாகவும், நமது நாட்டு ராணுவ வீரர்கள் இரவு, பகலாக விழிப்புடன் பணி செய்து நம்மை நிம்மதியாக உறங்க செய்வதாகவும் பெருமிதம் கொண்டார்.

21ம் நூற்றாண்டு காலநிலை மாற்றத்தின் சதாப்பதமாக பார்க்கப்படுகிறது என்று குறிப்பிட்ட அவர், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான ஆற்றலை உருவாக்குவதில் இந்தியா உலக அரங்கில் தலைமை வகிப்பதாக கூறினார். மேலும், ஒரு குடும்பம் எப்படி அடுத்த தலைமுறைக்காக கடுமையாக உழைக்கிறதோ, அதேபோல் நம் நாட்டின் அடுத்த தலைமுறை வளர்ச்சிக்காக அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.