பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்கிறதா? : சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் !!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளதால், உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்கிறதா? : சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் !!

சர்வதேச சந்தையில் நேற்று 1 பீப்பாய் கச்சா எண்ணெய் விலை ஆறாயிரத்து 600 ரூபாயாக உயர்ந்தது. கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் 1 பீப்பாய் கச்சா எண்ணெய் விலை ஐந்தாயிரத்து 175 ரூபாயாக இருந்தது. நான்கு வாரங்களில் கச்சா எண்ணெய் விலை 20 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. 

ஈரான் - துருக்கி இடையிலான எண்ணெய் குழாயில் ஏற்பட்டுள்ள சேதம், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால் ஏற்பட்டுள்ள பதற்றம் போன்ற காரணங்களால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.  ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில் மூன்று எண்ணெய் 'டேங்கர்'கள் மீது, ஏமன் நாட்டின் ஹவுதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலும் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வழி வகுத்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை அடிப்படையில், உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் 1 லிட்டர் பெட்ரோல் விலை, 100 ரூபாயை தாண்டியது. இதையடுத்து மத்திய அரசு, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. அதுபோல, பா.ஜ.க, ஆளும் மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்தன. ஆனால் தமிழகம் உட்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வரி குறைக்கப்படவில்லை. இதனால் இம்மாநில மக்கள், பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரும்பட்சத்தில் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என கருதப்படுகிறது.