தெலுங்கானா ஆளுநர் தமிழிசை மாற்றப்படுகிறாரா? - அரசியல் அரங்கில் பரவி வரும் பரபரப்புத் தகவல்!!

தெலுங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன் விரைவில் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை மாற்றப்படுகிறாரா? - அரசியல் அரங்கில் பரவி வரும் பரபரப்புத் தகவல்!!

தெலுங்கானா ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். அண்மைக் காலமாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் தனி அரசாங்கம் நடத்த மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இதனால், தமிழகம், மேற்கு வங்கம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் அரசுக்கும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. தெலுங்கானாவில் ஆளுநர் உரையில்லாமலேயே சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியது. தமிழகத்தில் ஆளுநர் ரவி அளித்த தேநீர் விருந்தை மாநில அரசு புறக்கணித்தது.

புதுச்சேரியில் ஆளுநர் தமிழிசை அளித்த தேநீர் விருந்தில் ஆளும் கூட்டணி அரசு கலந்து கொண்டாலும், திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணித்துள்ளன. கிரண்பேடி போல் நடந்து கொள்ளும் தமிழிசையை மாற்ற வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அனைத்திற்கும் மேலாக தமிழக ஆளுநர் ரவி மாற்றப்பட வேண்டும் என்று  நாடாளுமன்றத்திலேயே திமுக வலியுறுத்தியது.

இந்தநிலையில், ஆளுநர் தமிழிசை மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கானா அல்லது புதுச்சேரி பொறுப்பில் இருந்து மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. புதுச்சேரியில் பாஜக கூட்டணி அரசு என்பதால் தமிழிசைக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமே எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. ஆனால், தெலுங்கானாவில் ஆளும் அரசே எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

அதனால், தெலுங்கானா ஆளுநர் பொறுப்பில் இருந்து அவர் மாற்றப்படலாம் என்று  பேசப்படுகிறது. அதேநேரத்தில், ஆளுநரை மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் அது குறித்து கண்டு கொள்ளாமல், தெலுங்கானா ஆளுநரான தமிழிசையை மத்திய அரசு மாற்ற உள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.