நுபுர் ஷர்மாவுக்கு எதிராக கொல்கத்தா காவல்துறை லுக்அவுட் நோட்டீஸ் !!

நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை கருத்து தெரிவித்த பா.ஜ.க.வின் நுபுர் ஷர்மாவுக்கு எதிராக கொல்கத்தா காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. 

நுபுர் ஷர்மாவுக்கு எதிராக கொல்கத்தா காவல்துறை லுக்அவுட் நோட்டீஸ் !!

முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பா.ஜ.க.வின் நுபுர் சர்மா மீது பல்வேறு இடங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில், நாடு முழுவதும் தனக்கு எதிராக தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி நுபுர் சர்மா அண்மையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். 
 
நுபுர் சர்மாவின் வாதங்களும், வார்த்தைகளும் நீதிமன்றத்தில் நம்பிக்கைக்கு உரியதாக இல்லாததால் மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நுபுர் சர்மாவின் வார்த்தை நாட்டை தீக்கரையாகி விட்டதாக கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், உதய்ப்பூரில் நிகழ்ந்த படுகொலைக்கு இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களே காரணம் என்றும். ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருப்பதாலேயே எதுவும் பேசிவிட முடியாது எனவும் உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. 
 
நுபுர் சர்மா மீது பல்வேறு புகார்கள் பதியப்பட்டுள்ள நிலையில், அதன் மீதான டெல்லி காவல்துறையின் நடவடிக்கை என்ன? என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. மேலும், நுபுர் சர்மா தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில், நுபுர் ஷர்மா வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் அவருக்கு எதிராக கொல்கத்தா காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.