”ஆண்களைப் பூட்டுங்கள்... அவர்களே சிக்கலை உருவாக்குகிறார்கள்...பெண்கள் சுதந்திரமாக நடக்கட்டும்...” கேரளா உயர் நீதிமன்றம்

”ஆண்களைப் பூட்டுங்கள்... அவர்களே சிக்கலை உருவாக்குகிறார்கள்...பெண்கள் சுதந்திரமாக நடக்கட்டும்...” கேரளா உயர் நீதிமன்றம்

சிறுமிகள் மற்றும் பெண்கள் இரவில் தனியாக செல்ல பயப்படத் தேவையில்லை.  இருட்டிலும் அனைவரும் பாதுகாப்பாக வெளியில் செல்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

நீதிமன்ற வழக்கு:

கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மாணவிகள் 5 பேர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இதனைத் தெரிவித்துள்ளது.  இந்த மனுவின் மூலம், உயர்கல்வி நிறுவனங்களின் விடுதிகளில் வசிக்கும் சிறுமிகள் மற்றும் பெண்கள் இரவு 9.30 மணிக்குப் பிறகு விடுதியை விட்டு வெளியேறுவதைத் தடைசெய்த 2019ஆம் ஆண்டு அரசாணைக்கு சவால் விடும் விதமாக அமைந்துள்ளது.

மேலும், 2019-ம் ஆண்டு அரசாணை தங்கள் விடுதியில் மட்டுமே அமல்படுத்தப்படுவதாகவும், ஆண்கள் விடுதியில் அமல்படுத்தப்படுவதில்லை என்றும் மனுதாரர்கள் வாதிட்டுள்ளனர்.  மேலும் நீதி, நியாயம் மற்றும் நல்ல மனசாட்சியின் நலன் கருதி வாசகசாலை அல்லது படிப்புக் கூடம், வளாகத்துடன் இணைக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் உடற்பயிற்சி மையம் ஆகியவற்றை நேரக்கட்டுப்பாடு இல்லாமல் அனுமதிக்குமாறும் மருத்துவக் கல்லூரி மாணவிகள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

விசாரணை:

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பெண்கள் அல்லது சிறுமிகளை மட்டும் ஏன் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் ஆண்களையும் சிறுவர்களையும் ஏன் கட்டுப்படுத்தக்கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளது.  மேலும், மருத்துவக் கல்லூரி விடுதிகளில் வசிக்கும் பெண்கள் இரவு 9.30 மணிக்கு மேல் வெளியே செல்ல தடை விதித்தது ஏன் என்றும் பெண்களும் இந்த சமுதாயத்தில் வாழ வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.  

இரவு 9.30 மணிக்கு மேல் பெரிய நெருக்கடி வருமா?  என்றும் வளாகத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது அரசின் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளது.  சிறுவர்கள் வெளியேற அனுமதிக்கப்படாத இதுபோன்ற விடுதிகள் வேறு ஏதேனும் மாநிலத்தில் உள்ளதா என்றும் நீதிமன்றம் கேட்டுள்ளது.

தீர்ப்பு:

சிறுமிகள் மற்றும் பெண்கள் மட்டும் இரவில் வெளியே செல்ல தடை விதித்தது ஏன் என கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  மேலும், சிறுவர்கள் மற்றும் ஆண்களுக்கு கிடைக்கும் சுதந்திரம் அவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.  ஆண்கள் பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள். எனவே அவர்களை அடைத்து வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

நீதிபதி திவான் ராமச்சந்திரன் கருத்து:

நீதிபதி திவான் ராமச்சந்திரன் கூறுகையில், சிறுமிகள் மற்றும் பெண்கள் இரவில் தனியாக செல்ல பயப்படத் தேவையில்லை என்றும், இருட்டிலும் அனைவரும் பாதுகாப்பாக வெளியில் செல்வதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், தனக்கு மகள் இல்லாததால் தான் கட்டுப்பாடுகளை கேள்வி எழுப்புவதாக சிலர் கூறுவதாகவும் நீதிபதி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.  ஆனால் டெல்லியில் தங்கும் விடுதிகளில் வசிக்கும் சில உறவினர்களின் பெண் குழந்தைகள் இருப்பதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.  

அரசின் பதில்:

ஆனால் அவர்கள் படிக்கும் இடத்தில், அத்தகைய கட்டுப்பாடுகள் இல்லை எனக் கூறியதற்கு சிறுமிகளின் பெற்றோரின் கவலையை கருத்தில் கொண்டு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

நீதிமன்றம் எதிர்கேள்வி:

பெண்கள் மற்றும் சிறுமிகளின் பெற்றோரின் கவலைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் ஆனால் மாநிலத்தில் வேறும் சில தங்கும் விடுதிகள் உள்ளன எனவும் அங்கு கட்டுப்பாடுகள் இல்லையே எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் அங்கு வசிக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர் இல்லையா என்றும் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. பெண்கள் அல்லது சிறுமிகள் இரவில் வெளியே செல்வதை பெற்றோர்கள் தடை செய்ய நினைத்தால் அரசை குறை சொல்ல மாட்டோம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.  

இரவைப் பற்றி நாம் பயப்பட வேண்டாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. ஆண் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் சுதந்திரம் பெண் குழந்தைகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   உலகை அச்சுறுத்த போகும் உணவு பற்றாக்குறை...என்ன செய்யபோகிறது இந்தியா!!!