தனியார் ரசாயன ஆலையில் திடீர் தீ விபத்து... 15 பெண்கள் உள்பட 18 பேர் பலி

தனியார் ரசாயன ஆலையில் திடீர் தீ விபத்து... 15 பெண்கள் உள்பட 18 பேர் பலி

புனேவில் தனியார் ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பெண்கள் உள்பட 18 பேர் பலியாகியுள்ளனர். 

மகாராஷ்டிர மாநிலம் புனேவின் புறநகர் பகுதியான  முல்ஷி தெஹ்ஸிலின் என்னும் பகுதியில் தனியாருக்கு சொந்தமான குளோரின் டை ஆக்சைடு தயாரிக்கும் ரசாயன ஆலை அமைந்துள்ளது. அங்கு 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தீவிபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ரசாயன தொழிற்சாலை என்பதால் தீ தொழிற்சாலையின் பெரும்பாலான பகுதிக்கு பரவி கொளுந்து விட்டு எரிந்ததால், தொழிற்சாலையின் சுவரை உடைத்து உள்ளே சென்று தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. இந்த தீ விபத்தில் 15 பெண்கள் உள்பட 18 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதற்கிடையில், தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.