கனமழையால் கேரளா மாநிலத்தின் முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பு...

கேரளாவை ஒட்டியுள்ள அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அம்மாநிலத்தையே புரட்டிப் போட்டுள்ளது. கனமழை காரணமாக முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 

கனமழையால் கேரளா மாநிலத்தின் முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பு...

தென்கிழக்கு அரபிக் கடலில் கேரளாவை ஒட்டி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி மையம் கொண்டுள்ளது. இதனால் கேரளத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. பத்தனம் திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. அம்மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் முக்கிய நகரங்களில் உள்ள பெரும்பாலான வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. 

கோட்டயத்தில் பெய்துவரும் தொடர்மழையால் சாலைகளில் இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. பூஞ்சாரின் தாழ்வான பகுதியில் தேங்கியிருந்த மழைநீரில் அரசுப் பேருந்து ஒன்று சிக்கியது. பேருந்தின் ஜன்னல்கள் வழியாக மழைநீர் புகுந்த நிலையில் அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. புல்லிபுரா என்ற பகுதியில் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் ஆறுகளுக்கு அருகேயும், மலைப் பகுதிகளிலும் பயணிக்க வேண்டாம் என அம்மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 19-ம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.