ஆந்திரா: மூன்று தலைநகர திட்டத்திற்கு ஆதரவாக ஊர்வலம்...!

ஆந்திரா: மூன்று தலைநகர திட்டத்திற்கு ஆதரவாக ஊர்வலம்...!

ஆந்திராவில் மூன்று தலைநகர திட்டத்திற்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் ஊர்வலம் நடைபெற்றது.

அமராவதியை தலைநகராக அறிவித்த சந்திரபாபு நாயுடு:

தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநில பிரிவினைக்கு பின் அமராவதியை தலைநகராக அப்போதைய ஆந்திர முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு அறிவித்தார். சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து மாநில தலைநகர அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வந்தன. இதனைத்தொடர்ந்து, அடுத்து நடைபெற்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது.

மூன்று தலைநகரை அறிவித்த ஜகன்மோகன் ரெட்டி:

அதன்பின், முதலமைச்சராக பதவியேற்ற ஜெகன்மோகன் ரெட்டி மாநில முழுவதும் ஒரே அளவில் சீரான அபிவிருத்தி இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, சட்டமன்ற தலைநகரமாக அமராவதியும், நிர்வாக தலைநகரமாக விசாகப்பட்டினமும், நீதித்துறை தலைநகரமாக கர்நூலும் இருக்கும் என்று அறிவித்தார்.

இதையும் படிக்க: இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பாகிஸ்தான்... உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் சொல்வது என்ன?

விவசாயிகள் அதிர்ச்சி:

இதனால் அமராவதியில் தலைநகரம் அமைக்க 32,000 ஏக்கர் நிலம் கொடுத்த விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன், அரசின் மூன்று தலைநகர் திட்டத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்தனர்.

நீதிமன்றம் உத்தரவு:

தொடர்ந்து, இந்த விவகாரம் ஆந்திர உயர் நீதிமன்றத்திற்கு சென்றது. அங்கு விசாரணை நடத்திய
உயர் நீதிமன்றம் விரைவில் அமராவதியில் தலைநகர அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆந்திர மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஆந்திரா அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.  அந்த வழக்கு தொடர்பான விசாரணை விரைவில் நடைபெறவுள்ளது.

மூன்று தலைநகர் திட்டத்திற்கு ஆதரவாக ஊர்வலம்:

இந்நிலையில், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் மூன்று தலைநகர் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆளும் கட்சியான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மாநிலம் முழுவதும் ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தில் கட்சி தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.