முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் கலந்தாய்வு ஜனவரி 12ம் தேதி தொடக்கம்...

முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் கலந்தாய்வு ஜனவரி 12ம் தேதி துவங்கவுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். 

முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் கலந்தாய்வு ஜனவரி 12ம் தேதி தொடக்கம்...

மருத்துவ படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில்,  இதர பிற்படுத்தப்பட்டோருக்கு  27 சதவீத இடஒதுக்கீடும், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடும் வழங்கப்படுகிறது. இதை உறுதி செய்து கடந்தாண்டு  ஜூலை மாதம்  மத்திய அரசு அரசாணை வெளியிட்டது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து, முதுநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பாதிப்புக்குள்ளான பயிற்சி மருத்துவர்கள் பலர் டெல்லியில் உச்சநீதிமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். இதில் போலீசாருக்கும், மருத்துவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்படவே, பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே இரு தினங்களுக்கு முன் இந்த இடஒதுக்கீடு வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் ஒபிசி பிரிவினருக்கான 27 சதவீதம் இடஒதுக்கீடு செல்லும் என கூறியது. மேலும் தற்போதைய இடஒதுக்கீடு நடைமுறைகளின்படி 2021-22 கல்வி ஆண்டுக்கான இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்தவும் அனுமதி அளித்தது. இந்தநிலையில், வெகுநாட்களாக தள்ளிப்போன முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் கலந்தாய்வு வரும் 12-ம் தேதி துவங்க உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா முகநூல் வாயிலாக தெரிவித்துள்ளார்.