சச்சின் பைலட்டுக்கு வலுக்கும் எதிர்ப்பு...அதிருப்தியில் சோனியா, ராகுல்...!

சச்சின் பைலட்டுக்கு வலுக்கும் எதிர்ப்பு...அதிருப்தியில் சோனியா, ராகுல்...!

ராஜஸ்தானில் சச்சின் பைலட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள 90க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள், கட்சி மேலிட பார்வையாளர்களை சந்திக்க மறுத்துவிட்டனர். மேலும், அசோக் கெலாட்டே முதலமைச்சராக நீடிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய முதலமைச்சர் யார்?:

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதலமைச்சராக உள்ள அசோக் கெலாட் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியின் கொள்கையின்படி ஒருவர் ஒரு பதவியில் மட்டுமே இருக்க வேண்டும் என்பது விதி. இந்த விதியின்படி ஒருவேளை கெலாட் தலைவராக தேர்வாகும் பட்சத்தில், முதலமைச்சர் பதவியிலிருந்து அவர் விலக வேண்டும் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம், ஜெய்பூரில் உள்ள அசோக் கெலாட் இல்லத்தில் நேற்றிரவு நடைபெற்றது. இதில், ராஜஸ்தானின் புதிய முதலமைச்சராக சச்சின் பைலட் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

சச்சின் பைலட்க்கு எதிராக போர்க்கொடி:

காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர்கள் மல்லிகார்ஜுன கார்கே, அஜய் மக்கான் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தை புறக்கணித்த அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள், சச்சின் பைலட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். மேலும், அம்மாநில சபாநாயகர்  CP ஜோஷியை 90 க்கும் அதிகமான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சந்தித்து தங்களது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின. 

இதையும் படிக்க: பாஜகவின் பிம்பங்களை உடைத்து சவால்களை சாதனைகளாக மாற்றுவாரா அசோக் கெலாட்!!!

கெலாட்டே முதலமைச்சராக நீடிக்க வேண்டும்:

இதனையடுத்து, அசோக்கெலாட் ஆதரவு எம்எல்ஏக்களுடன் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால் அவர்களை சந்திக்க மறுத்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அசோக்கெலாட்டே முதலமைச்சராக நீடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அக்டோபர் 19ம் தேதி புதிய காங்கிரஸ் தலைவர் அறிவிக்கப்படும் வரை ராஜஸ்தானின் புதிய முதலமைச்சர் குறித்து முடிவு செய்யக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

அதிருப்தியில் சோனியா, ராகுல்:

இதனை தொடர்ந்து, டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை மல்லிகார்ஜுன கார்கே, அஜய் மக்கான் ஆகியோர் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர். அசோக் கெலாட் ஆதரவாளர்களின் இந்த செயலால் சோனியா, ராகுல் காந்தி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.