கோதாவரி ஆற்றில் வரலாறு காணாத அளவு வெள்ளப்பெருக்கு...3,000கும் மேற்பட்ட வீடுகள் மூழ்கியதால் மக்கள் அவதி!

கோதாவரி ஆற்றில் வரலாறு காணாத அளவு வெள்ளப்பெருக்கு...3,000கும் மேற்பட்ட வீடுகள் மூழ்கியதால் மக்கள் அவதி!

கோதாவரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை அடுத்து புதுச்சேரி, ஏனாம் மாவட்டத்தில் ஆற்றின் கரையோரத்தில் உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்:

புதுச்சேரியின் ஏனாம் மாவட்டம் கோதாவரி ஆற்றங்கரை பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில், ஆந்திரா, தெலுங்கான உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கோதாவரி ஆற்றில் வரலாறு காணாத அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏனாம் மாவட்டத்தின் பரம்பேட்டா, அய்யன்ன நகர், ராஜுவ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. 

படகு மூலம் உணவு மற்றும் தண்ணீர் விநியோகம்:

இதனால் தண்ணீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக கூட வெளியே வர முடியாமல் கடந்த ஐந்து நாட்களாக பொது மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். இதையடுத்து அவர்களுக்கு படகு மூலம் தண்ணீர் மற்றும் உணவு விநியோகிக்கப்பட்டு வருகிறது...

கோதாவரி ஆற்றில் மேலும் அதிகரிக்கும் வெள்ளம்:

இதனிடையே கோதாவரி ஆற்றில் மேலும், வெள்ளம் அதிகரிக்கும் என்பதால் கரையோரங்களில் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, வெள்ளத்தில் சிக்கியவர்களை ரப்பர் படகு மூலம் மீட்கும் பணியில் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளப்பாதிப்பில் சிக்கியுள்ள மக்களை மீட்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் : 

இதையடுத்து, ஏனாம் மாவட்ட வெள்ள பாதிப்புகளை கண்காணித்து வருவதாகவும், தேவைப்பட்டால் அனைத்து துறை மீட்பு குழுவையும் அங்கு அனுப்ப தயாராக உள்ளதாகவும் புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. மேலும், வெள்ளப்பாதிப்பில் சிக்கியுள்ள மக்களை மீட்கவும், அவர்களுக்கு குடிநீர், உணவு, மருத்துவ உதவி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்...