நமீபியா சிறுத்தைகள் வருகை குறித்து பிரதமர் மோடி பெருமிதம்!!!

நமீபியா சிறுத்தைகள் வருகை குறித்து பிரதமர் மோடி பெருமிதம்!!!

குனோ தேசிய பூங்காவில் நமீபியாவில் இருந்து சிறுத்தைகளை விடுவித்த பின்னர் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார். பத்தாண்டுகளுக்கு முன் உடைந்த பல்லுயிர் பெருக்கத்தின் பழமையான இணைப்பை மீண்டும் இணைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது கூறியுள்ளார். ”இன்று சிறுத்தைகள் இந்திய மண்ணுக்குத் திரும்பிவிட்டன.  இந்த சிறுத்தைகளுடன் சேர்ந்து, இந்தியாவின் இயற்கையை நேசிக்கும் உணர்வும் முழு சக்தியுடன் விழித்தெழுந்து விட்டன” எனவும் பிரதமர் கூறியுள்ளார். 

இந்தியா திரும்பிய சிறுத்தைகள்:

”பல ஆண்டுகளுக்கு பிறகு சிறுத்தைகள் இந்திய மண்ணுக்குத் திரும்பியுள்ளது. நமது நட்பு நாடான நமீபியா அரசாங்கத்திற்கும் அங்குள்ள மக்களுக்கும் நன்றி” என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.

மேலும் "1952 ஆம் ஆண்டு நாட்டில் சிறுத்தைகள் முற்றிலும் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது.  ஆனால் பல ஆண்டுகளாக அவற்றை திரும்ப கொண்டு வருவதற்கான முயற்சிகளும் எடுக்கப்படவில்லை," என்றும் மோடி கூறியுள்ளார்.

மேலும் தெரிந்துகொள்க: இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கு ஒத்துப்போகுமா நமீபியா சிறுத்தைகள்?!!

சிறுத்தைகளின் மறுவாழ்வு:

”புதிய ஆற்றலுடன் சிறுத்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கத் தொடங்கப்பட்டுள்ளது.  இயற்கையும் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்போது நமது எதிர்காலமும் பாதுகாப்பாகும். வளர்ச்சி மற்றும் செழிப்புக்கான வழிகளும் திறக்கப்படுகின்றன. குனோ தேசிய பூங்காவில் சிறுத்தைகள் மீண்டும் ஓடும்போது, ​​இங்குள்ள சுற்றுச்சூழல் மீண்டும் வலுவடைந்து பல்லுயிர் பெருகும்.” என்று பிரதமர் கூறியுள்ளார். 

நாட்டு மக்களின் பொறுமை:

”குனோ தேசிய பூங்காவில் விடுவிக்கப்பட்ட சிறுத்தைகளைப் பார்க்க நாட்டு மக்கள் சில மாதங்கள் பொறுமை காட்ட வேண்டும். இன்று இந்த சிறுத்தைகள் இந்த பகுதியை அறியாமல் விருந்தினர்களாக வந்துள்ளன. இந்த சிறுத்தைகள் குனோ தேசிய பூங்காவை தங்கள் இருப்பிடமாக மாற்ற, இந்த சிறுத்தைகளுக்கு சில மாதங்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். ” என்று பிரதமர் மோடி பொது மக்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.  

மேலும் “சர்வதேச வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, இந்தியா இந்த சிறுத்தைகளை பாதுகாக்க  இயன்றவரை முயற்சி செய்து வருகிறது. நமது முயற்சிகள் தோல்வியடைய அனுமதிக்கக் கூடாது.” என்றும் தெரிவித்துள்ளார்.

அதிகரித்த ஆசிய சிங்கங்கள்: 

நமது நாட்டில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கையும் பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இன்று குஜராத் நாட்டிலேயே ஆசிய சிங்கங்கள் அதிகம் கொண்ட பெரிய பகுதியாக உருவெடுத்துள்ளது எனவும் பல வருடங்களின் கடின உழைப்பு, ஆராய்ச்சி அடிப்படையிலான கொள்கைகள் மற்றும் பொது பங்கேற்பு ஆகியவை இதற்குப் பின்னால் பெரும் பங்கு வகிக்கின்றன எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.  

”புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் இலக்கு முன்னதாகவே எட்டப்பட்டது. ஒரு கொம்பு காண்டாமிருகத்தின் இருப்பு ஒரு காலத்தில் அசாமில் அச்சுறுத்தப்பட்ட நிலையில் இருந்தது.  ஆனால் இன்று அவற்றின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. யானைகளின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டுகளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. நாட்டின் இந்த முயற்சிகளின் பலன் இன்னும் பல நூற்றாண்டுகளுக்குத் தெரியும், மேலும் முன்னேற்றத்திற்கான புதிய பாதைகளை அமைக்கும்” என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: பிரதமர் மோடி ஆட்சியில் இரு மடங்காக அதிகரிக்கப்பட்ட பெரிய பூனைகள்!!!!