ராகுல்காந்தி விவகாரம் : 8-ம் நாளாக முடங்கியது நாடாளுமன்றம்!

ராகுல்காந்தி விவகாரம் : 8-ம் நாளாக முடங்கியது நாடாளுமன்றம்!

ராகுல்காந்தி விவகாரம் தொடர்பாக பாஜகவினரின் அமளியால் நாடாளுமன்றம் 8-ம் நாளாக முடங்கியது.


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு, கடந்த 13ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து இந்தியாவில் ஜனநாயகம் பாதிக்கப்பட்டுள்ளதாக லண்டனில் ராகுல்காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென ஆளுங்கட்சி அமைச்சர்களும் எம்பிக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பான அமளியால் 7 நாட்களாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

இதையும் படிக்க : என்.எல். சிக்கு எதிரான கிராமசபை தீர்மான வரிகளின் வலிகளை உணர வேண்டும் - அன்புமணி இராமதாஸ் அறிக்கை!

இந்நிலையில் நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவது தொடர்பாக மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து மக்களவை தொடங்கியவுடன் தேசத்தினரிடம் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டுமென பாஜக எம்பிக்கள் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நடைபெற்ற அமளியால் அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் தேசத்திற்கே ராகுல்காந்தி துரோகம் இழைத்து விட்டதாக மாநிலங்களவையிலும் பாஜக அமைச்சர்கள் அமளியில் ஈடுபட்டதையடுத்து, 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

இன்றைய கூட்டத்தொடரில் 35 மசோதாக்கள் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நாடாளுமன்றம் 8 நாட்களாக ஒத்திவைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரிக்க வலியுறுத்தி, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.