சில மாநிலங்கள் வாட் வரியைக் குறைக்காததால் பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு - பிரதமர் மோடி விமரிசனம்

மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் வாட் வரியைக் குறைக்காததால்  பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருவதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

சில மாநிலங்கள் வாட் வரியைக் குறைக்காததால் பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு - பிரதமர் மோடி விமரிசனம்

நாட்டின் கொரோனா பாதிப்பு குறித்து மாநில முதலமைச்சர்களுடன் இன்று காணாலி வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், கடந்த நவம்பரில் எரிபொருள் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்ததாக தெரிவித்தார். அதேபோல்  மாநில அரசுகள்  வரியை குறைத்திருந்தால் எரிபொருட்கள் விலையேற்றம் இருந்திருக்காது என்றார்.

குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா,ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் வாட் வரியை குறைக்க முன்வரவில்லை என்று மோடி குற்றம்சாட்டினார்.

மேலும் வாட் வரியை குறைத்து மக்களுக்கு எரிபொருள் விலை குறைப்புப் பலனை வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் பிரதமர் மோடி குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மட்டும் மேற்கோள் காட்டி வரியை குறைக்கக் கூறுவதாக திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.

அம்மாநிலங்களில் வசூலிக்கும் வரியின் அளவு 3 மடங்கு அதிகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் எனப் பேசும் மத்திய அரசு ஏழைக் குடும்பத்தைப் போல் பொதுத்துறை நிறுவனங்களை விற்பதாகவும் அவர் சாடியுள்ளளார்.

இந்நிலையில் பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரி மூலம் 26 லட்சம் கோடி ரூபாய் லாபம் ஈட்டும் மத்திய அரசு, மாநிலங்களுடன் அதனை பகிர்ந்து கொண்டதா என காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலில் கலால் வரியை குறைத்து விட்டு மாநிலங்களை வாட் வரியை குறைக்கச் சொல்லி கேட்குமாறும் அவர் சாடினார். அத்துடன் மாநில அரசுகளுக்கு  வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும்  காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.