939 காவல்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் : தமிழகத்தில்  20 பேர் தேர்வு!!

குடியரசு நாளையொட்டி தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள 939 காவல்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த 20 போலீஸ் அதிகாரிகளுக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

939 காவல்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் : தமிழகத்தில்  20 பேர் தேர்வு!!

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று சிறந்த பணிக்கான பதக்கங்கள், மாநில போலீஸ் அதிகாரிகள், மத்திய ஆயுதப்படை வீரர்கள் ரயில்வே போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும். அந்தவகையில், இந்த ஆண்டிற்கான பதக்கம் பெறும் போலீஸ் அதிகாரிகளின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதில், ஜனாதிபதியின் பாராட்டத்தக்க பணிக்கான பதக்கம் 88 பேருக்கும், வீரதீர செயல்களுக்கான காவல் பதக்கம் 189 பேருக்கும், தகைசால் பணிக்கான காவல் விருது 662 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தை சேர்ந்த 20 போலீஸ் அதிகாரிகளுக்கு இரண்டு பிரிவுகளின் கீழ் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.டி. ஜி.பி, வெங்கடராமன், தஞ்சாவூர் ஐ. ஜி. சிவன் அருள் ஆகியோர் ஜனாதிபதியின் பாராட்டத்தக்க பணிக்கான பதக்கத்தை பெறுகின்றனர். தகைசால் பணிக்கான காவல் விருதை தமிழக போலீஸ் அதிகாரிகள் 18 பேர் பெறுகின்றனர்.