வரும் 18ம் தேதி குடியரசு தலைவர் தேர்தல்  :  பாஜக வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிப்பு !!

குடியரசு தலைவர் தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.

வரும் 18ம் தேதி குடியரசு தலைவர் தேர்தல்  :  பாஜக வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிப்பு !!

குடியரசு தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பொது வேட்பாளராக எதிர்க்கட்சிகளின் சார்பில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தவருமான யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார். 

இதனையடுத்து, ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளரை இறுதி செய்வதற்காக டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், குடியரசு தலைவர் வேட்பாளராக  ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநரும், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவருமான திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டார்.  

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, முதல்முறையாக பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண், குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் என தெரிவித்தார். குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு, வரும் 25ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள திரௌபதி முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், திரௌபதி முர்மு தனது வாழ்க்கையை சமுதாய சேவைக்காகவும், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் கிடைப்பதற்காகவும் அர்ப்பணித்தவர் என்றும் அவர் நம் நாட்டின் சிறந்த குடியரசுத் தலைவராக இருப்பார் என்று தான் நம்புவதாகவும் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, எதிர்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹா, வரும் 27ம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.