பிரதமர் மோடியுடன் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் பேச்சுவார்த்தை...

அமெரிக்கா வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்து இரு நாட்டின் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து  பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

பிரதமர் மோடியுடன் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் பேச்சுவார்த்தை...

குவாட் கூட்டமைப்பு நாடுகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும், ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும் பிரதமர் மோடி 5 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். முதல் நாளன்று பல்வேறு சர்வதேச நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்த அவர், இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார். பின அமெரிக்க துறை அதிபர் கமலா ஹாரீசுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது இந்தியா வருமாறு கமலா ஹாரிசுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் நேற்று வெள்ளை மாளிகை சென்ற பிரதமர் மோடிக்கு  இந்திய வம்சாவளியினர் பரத நாட்டியம் ஆடி உற்சாக வரவேற்பு அளித்தனர். 

பின் ஜோபைடனுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பிரதமர் மோடி உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது இரு தரப்பு உறவு மேம்பாடு, ஆப்கான் விவகாரம் மற்றும் இந்தோ பசிபிக் பெருங்கடலில் சீன ஆதிக்கம் உள்ளிட்ட சர்வதேச பிரச்சனைகள் குறித்து விவாதித்துள்ளனர்.  

இதையடுத்து இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் மோடி பங்கேற்றார். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்த குவாட் உச்சி மாநாட்டில் நேரில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுத்த ஜோ பைடனுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

உலக நன்மைக்கான சக்தியாக குவாட் கூட்டமைப்பு இயங்கும் என குவாட் ஊச்சி மாநாட்டில் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இன்று உலகம் கொரோனாவுடன் போராடும்போது, குவாட் உறுப்பினர்கள் மீண்டும் மனிதநேயத்தின் நலனுக்காக ஒன்றிணைந்துள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, குவாட் தடுப்பூசி முயற்சி இந்தோ-பசிபிக் பிராந்திய மக்களுக்கு நிச்சயம் உதவும் என நம்பிக்கை தெரிவித்தார். உலக நன்மைக்கான சக்தியாக இந்த குவாட் கூட்டமைப்பு இயங்கும் எனவும் குறிப்பிட்ட பிரதமர் மோடி, குவாட்டில் எங்கள் ஒத்துழைப்பு இந்தோ-பசிபிக் மற்றும் முழு உலகிலும் அமைதியையும் செழிப்பையும் உறுதி செய்யும் என்று தாம் நம்புவதாகவும் கூறினார்.

இதையடுத்து ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76-வது விவாத அமர்வில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நியூயார்க் புறப்பட்டுச் சென்றார்.  நியூயார்க் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு  இந்திய வம்சாவளியின மக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நியூயார்க்கில் பிரதமர் மோடி  தங்கும்  ஓட்டலுக்கு வெளியே கூடிய ஏராளமான மக்கள்  'வந்தே மாதரம்' மற்றும் 'பாரத் மாதா கி ஜெய்' என்று கோஷங்கள் எழுப்பி பிரதமர் மோடியை வரவேற்றனர். அப்போது தம்மை  காண குழுமியிருந்த மக்களுடன் கைகுலுக்கி பிரதமர் மோடி தனது மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டார்.