நீதிமன்றங்களில் மாநில மொழிகளை ஊக்குவிக்க வேண்டும்...அனைத்து மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் வலியுறுத்தல்!

நீதிமன்றங்களில் மாநில மொழிகளை ஊக்குவிக்க வேண்டும் என அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் தலைமை நீதிபதிகளின் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நீதிமன்றங்களில் மாநில மொழிகளை ஊக்குவிக்க வேண்டும்...அனைத்து மாநில முதலமைச்சர்கள்  மாநாட்டில் பிரதமர் வலியுறுத்தல்!

அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் மாநில தலைமை நீதிபதிகள் மாநாடு டெல்லியில்  நடைபெற்றது. இதனை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகியோர் கலந்து கொண்டனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு, மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் மாநாட்டில் பங்கேற்றனர்.

மாநாட்டை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, நீதித்துறையை மேம்படுத்தவும் அதன் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்காக அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக கூறினார். மேலும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் இன்றியமையாத ஒரு பகுதியாக நீதித்துறையில் தொழில்நுட்பத்தை புகுத்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும், அதன்படி இணைய வழி நீதிமன்றங்கள் என்னும் திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படுவதாகவும் கூறினார். நீதிமன்றங்களில் மாநில மொழிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், இது சாமானிய மக்களுக்கு நீதித்துறையின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் என்றார். இந்திய தண்டனை சட்டத்தில் பொருத்தமற்றதாக கண்டறியப்பட்ட ஆயிரத்து 800 சட்டங்களில் ஆயிரத்து 450 சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாகவும், ஆனால் அதில் 75 சட்டங்களை மட்டுமே மாநிலங்கள் தரப்பில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

முன்னதாக பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா, நாடு முழுவதும் சுமார் 4 கோடி வழக்குகள் விசாரணை நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாகவும், ஆனால் இந்த வழக்குகளை விசாரிப்பதற்கு வெறும் 24 ஆயிரம் நீதிபதிகள் மட்டுமே இருப்பதாகவும் கூறினார்.
10 லட்சம் மக்களுக்கு 20 நீதிபதிகள் தான் இருப்பதாகவும், இது அதிகரித்து வரும் வழக்குகளின் எண்ணிக்கையை சமாளிக்க போதுமானதாக இல்லை எனவும் கருத்து தெரிவித்தார்.