செஸ் ஒலிம்பியாட்: சென்னை வருகிறார் பிரதமர் மோடி... டிரோன்கள், ஆளில்லா வான்வழி விமானங்கள் பறப்பதற்கு தடை!

செஸ் ஒலிம்பியாட்: சென்னை வருகிறார் பிரதமர் மோடி... டிரோன்கள், ஆளில்லா வான்வழி விமானங்கள் பறப்பதற்கு தடை!

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, சென்னையில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட்:

செஸ் ஒலிம்பியாட் 2022 ஆம் ஆண்டிற்கான சர்வதேச போட்டி வருகிற ஜூலை 28 ஆம் தேதி சென்னையடுத்த மாமல்லபுரத்தில் மிகப் பிரம்மாண்டமாக  நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு துரிதமாக செய்து வருகிறது. அதேசமயம் சர்வதேச அளவில் நடைபெறும் இந்த போட்டி முதன்முறையாக தமிழ்நாட்டில் நடப்பதால், இந்த போட்டி குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்காக செஸ் தம்பி, வெல்கம் டூ பாடல், ஆவின் பால் பாக்கெட்களில் தம்பி புகைப்படம் என பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகிறது. 

பிரதமர் மோடி தமிழகம் வருகை:

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா, நாளை மறுநாள் அதாவது ஜூலை 28 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. இந்த தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். அப்படி தமிழகம் வரும் பிரதமர் மோடி, கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்குவதற்கு திட்டமிட்டிருக்கின்றனர். மேலும், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவை தொடர்ந்து, 29ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் பங்கேற்க உள்ளார்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்:

இந்த நிலையில், பிரதமரின் வருகையை முன்னிட்டு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். மேலும், காவல்துறை சார்பில் 5 அடுக்கு பாதுகாப்பிற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 22 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டிரோன்கள் பறப்பதற்கு தடை:

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி  பிரதமர் மோடி சென்னை வருவதால், ஜூலை 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி விமானங்கள்  பறப்பதற்கும்  தடை விதிக்கப்பட்டுள்ளது.