மனஅழுத்தமின்றி முழு வலிமையுடன் விளையாடுக.. காமன்வெல்த் வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து!!

மனஅழுத்தமின்றி, முழு பலத்துடன் விளையாடுங்கள் என காமன்வெல்த் விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மனஅழுத்தமின்றி முழு வலிமையுடன் விளையாடுக.. காமன்வெல்த் வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து!!

காமன்வெல்த் 2022 போட்டிகள்:

காமன்வெல்த் 2022 போட்டிகள் வருகிற 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகரில் நடைபெறவுள்ளது. இதில் 141 போட்டிகளில் விளையாட இந்தியாவிலிருந்து 215 வீரர்கள், வீராங்கனைகள் செல்கின்றனர்.

மனஅழுத்தமின்றி முழு வலிமையுடன் விளையாட வேண்டும் - மோடி:

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் இந்திய தடகள வீரர்களுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது அதே தினத்தில் தமிழ்நாட்டில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நினைவு கூர்ந்து பேசிய மோடி, வரும் நாட்கள் விளையாட்டு வீரர்கள் தங்களது திறமையை உலகுக்கு காட்டும் மிக முக்கியமான நாட்கள் எனக் குறிப்பிட்டார். எனவே வீரர்கள் தருணத்தை பயன்படுத்தி, மனஅழுத்தமின்றி முழு வலிமையுடன் விளையாட வேண்டும் என அறிவுறுத்தினார்.

வழக்கமான கலந்துரையாடல்:

தடகளம் மற்றும் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பிரதமர் நரேந்திர மோடி, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதேபோல, இந்தியாவிற்காக வெற்றிகளை பெற்றுத்தரும் விளையாட்டு வீரர்களை பாராட்டவும், நாக் அவுட் போட்டிகளில் தோற்று வெளியேறும் வீரர், வீராங்கனைகளை தேற்றி, அடுத்த தொடர்களுக்கு தயார் படுத்துவதிலும் அவர் தவறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.