புல்வாமா தாக்குதல் பாஜகவின் திட்டமிட்ட சதி.....

புல்வாமா தாக்குதல் பாஜகவின் திட்டமிட்ட சதி.....

ஜம்மு காஷ்மீரில் நடந்து வரும் இந்திய ஒற்றுமை பயணத்தில், சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து திக்விஜய் சிங் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார். 

பொய்யான பாஜக:

பாஜகவின் மத்திய அரசிடம் புல்வாமா சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து பல கோரிக்கைகளை முன்வைத்த பிறகும் எந்த ஆதாரத்தையும் இதுவரை அது அளிக்கவில்லை என்று கூறியுள்ளார்.  மேலும் ஜம்முவில் உள்ள சத்வாரி சவுக்கில் இந்திய ஒற்றுமை பயணத்தின் போது பேசிய காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங், பாஜக பொய்களை மட்டுமே வைத்து ஆட்சி செய்கிறது என்று பேசியுள்ளார்.  தொடர்ந்து பேசிய திக் விஜய் சிங் புல்வாமா தாக்குதல் தொடர்பான தகவல்கள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை அல்லது பகிரங்கப்படுத்தப்படவில்லை என்று குற்றச்சாட்டியுள்ளார்.

வெறுப்பை பரப்பும் பாஜக:

மேலும் திக்விஜய் சிங் கூறுகையில், பாஜக அரசு இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வெறுப்பை மட்டுமே பரப்புகிறது எனவும் அதை தவிர இங்கு வேறு  எந்த வேலையும் செய்ய அரசு விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார்.  அதனைத் தொடர்ந்து பேசிய அவர் பாஜக அரசு இங்குள்ள பிரச்னையை தீர்க்க விரும்பவில்லை எனவும் காஷ்மீர் கோப்புகள் போன்ற திரைப்படங்கள் தொடர்ந்து தயாரிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்தப் பிரச்சனையை நிரந்தரமாக்க பாஜக விரும்புகிறது எனவும் திக் விஜய் தெரிவித்துள்ளார்.

புல்வாமா சம்பவத்தில் அரசின் தவறு:

பேரணியில் பேசிய திக்விஜய் சிங், புல்வாமா சம்பவம் அரசின் தவறு எனக் கூறியுள்ளார்.  மேலும், புல்வாமா பதற்றமான பகுதி என்பது அரசுக்கு தெரியும் என்றும், பிறகு ஏன் ராணுவ வீரர்களை காஷ்மீருக்கு விமானம் மூலம் அனுப்பவில்லை என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.   அதனோடு ஒவ்வொரு வாகனமும் சோதனை செய்யப்படுகிறது எனவும் பிறகு ஏன் ஸ்கார்பியோ வாகனத்தை சோதனை செய்யவில்லை எனவும் அதனால் தான் 40 ராணுவ வீரர்கள் பலியாகினர் என்றும் காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளார்.  

தக்க பதிலடி:

மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலியில் நேற்று முன்தினம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்திருந்தார்.  இந்திய ஒற்றுமை பயணத்தின்  மூலம் நாட்டில் வெறுப்புணர்வை பரப்புவதாகக் கூறி, இந்தியாவை அவதூறு செய்யவே ராகுல் காந்தி இவ்வாறு செயல்படுகிறார் என்று ராஜ்நாத் சிங் கூறியிருந்தார்.  ராஜ்நாத்தின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் தற்போது தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். 

-நப்பசலையார்

இதையும் படிக்க:  இந்தியாவின் செல்வாக்கை குறைக்கும் சீனாவின் தந்திரம்.....கண்டறிந்த இந்தியா!!!