உத்தரகாண்டில் பாஜக அரசின் 3ஆவது முதலமைச்சர்... இன்று பதவியேற்கிறார் புஷ்கர் சிங் தாமி...

உத்தரகாண்டில் 4 மாதங்களில் 3-வது முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி இன்று பதவி ஏற்க உள்ளார்.

உத்தரகாண்டில் பாஜக அரசின் 3ஆவது முதலமைச்சர்... இன்று பதவியேற்கிறார் புஷ்கர் சிங் தாமி...
உத்தரகாண்டில் நேற்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், புதிய முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜக ஆட்சி நடைபெறும் உத்தரகாண்ட் மாநிலத்தின் முதலமைச்சரான திரிவேந்திர ராவத், கட்சி மேலிடத்தின் உத்தரவை ஏற்று கடந்த மார்ச் மாதம் ராஜினாமா செய்தார். பாஜக எம்.எல்.ஏக்கள் சிலர் முதலமைச்சரின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்ததையடுத்து, மாற்றத்தை தலைமை விரும்பியதாக தகவல் வெளியானது.
அதன்பின்னர் முதலமைச்சராக தீரத் சிங் ராவத் பதவியேற்றார். நாடாளுமன்ற உறுப்பினரான அவர், முதலமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டுமானால் செப்டம்பர் 10ம் தேதிக்குள் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.   கொரோனா காரணமாக தேர்தல் நடத்த முடியாத சூழல் இல்லாததால், முதல்வர் பதவியில், தீரத் சிங் ராவத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, கட்சி மேலிட உத்தரவை ஏற்று தீரத் சிங் ராவத் நேற்று ராஜினாமா செய்தார். 
 
இதையடுத்து புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்காக பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், உத்தரகாண்டின் கட்டிமா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். புதிய முதல்வரின் பதவியேற்பு விழா, ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெறுகிறது. அப்போது, மாநிலத்தின் 11வது முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்க உள்ளார். இதன்மூலம் உத்தரகாண்ட் மாநிலம், கடந்த 4 மாதங்களில் மூன்று முதலமைச்சர்களை பெற்றுள்ளது.