நேஷனல் ஹெரால்டு வழக்கு  : விசாரணை முடிந்து நள்ளிரவு வீடு திரும்பிய ராகுல் காந்தி  !!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் 5வது நாளாக ஆஜரான காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியிடம் 12 மணிநேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

நேஷனல் ஹெரால்டு வழக்கு  : விசாரணை முடிந்து நள்ளிரவு வீடு திரும்பிய ராகுல் காந்தி  !!

நேஷனல் ஹெரால்டு வழக்கில், கடந்த வாரம் 3 நாட்கள், 30 மணிநேரத்துக்கும் மேலாக ராகுல் காந்தியிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் 4-வது நாளாக அமலாக்கத்துறையில் ஆஜரான ராகுல் காந்தியிடம் நள்ளிரவு வரை அதிகாரிகள்  விசாரணை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக, 5-வது நாளாக நேற்றும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல்காந்தி விசாரணைக்கு ஆஜரானார். பகல் 11 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவிலும் நீடித்தது. பின்னர் இரவு 9 மணிக்கு வீட்டுக்கு சென்ற ராகுல் காந்தி, 30 நிமிட ஓய்வுக்குப் பிறகு மீண்டும் அமலாக்கத்துறை அலுவலகம் வந்தார்.

இரவிலும் அவரிடம் துருவி துருவி அதிகாரிகள் விசாரணையை தொடர்ந்தனர். சுமார் 12 மணிநேரம் விசாரணை முடிந்து, அமலாக்கத்துறை அலுவலகத்திலிருந்து ராகுல்காந்தி வெளியேறினார். இதுவரை ராகுல்காந்தியிடம் கிட்டத்தட்ட 50 மணிநேரத்திற்கும் மேலாக  அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இதனிடையே, இவ்வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.