மும்பை, தானே, பல்கார், ராஜ்கட் மக்களே உஷாரா இருங்க!

மும்பை, தானே, பல்கார், ராஜ்கட் ஆகிய 4 நகரங்களில் மிக கடுமையான மழை பெய்யக்கூடும் என்பதால், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மும்பை, தானே, பல்கார், ராஜ்கட்  மக்களே உஷாரா இருங்க!

மராட்டிய மாநிலத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக  மும்பை மாநகரம் வெள்ளத்தில்  தத்தளிக்கும் நிலையில்   4 நகரங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மும்பையில் செவ்வாய்க்கிழமை இரவு முதல்  இடைவிடாது பெய்து வரும் கனமழையால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். தொடர்ந்து வெளுத்து  வாங்கிய கனமழையால்  மும்பை அந்தேரி உள்ளி்ட்ட பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. சாலைகள் சுரங்க பாலங்கள்  நீரில் மூழ்கியுள்ளன. சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

கன மழையால் தண்டவாளம், ரயில் நிலையங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குர்லா, மும்பை சிஎஸ்டி ஆகிய இடங்களில் மின்சார ரயில் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், மாதுங்கா கிங்ஸ் சர்க்கிள், செம்பூரில் உள்ள மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலை, அந்தேரி போன்ற இடங்களில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மழை நீர் சூழ்ந்துள்ளது.

மும்பை பகுதிகளில் 4 நாட்கள் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மும்பை கொலாபாவில் 8 சென்டிமீட்டர் மழையும், சாந்தாகுரூஸில் 6 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் தாராவி, தாதர், சயான் உள்ளிட்ட இடங்களில் பெருமளவு மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 இதனிடையே மும்பை, தானே, பல்கார், ராஜ்கட் ஆகிய 4 நகரங்களில் மிக கடுமையான மழை பெய்யக்கூடும் என்பதால்,  ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.