நுபுர் சர்மாவை கைது செய்ய வலுக்கும் கோரிக்கை : வன்முறையாக மாறி வரும் போராட்டம் !!

நுபுர் சர்மாவை கைது செய்ய கோரி மே.வங்கம், பஞ்சாப், தெலங்கானா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம்; போராட்டம் வன்முறையாக மாறி வருவதால் அனைத்து மாநிலங்களும் உஷார் நிலையில் இருக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு.

நுபுர் சர்மாவை கைது செய்ய வலுக்கும் கோரிக்கை : வன்முறையாக மாறி வரும் போராட்டம் !!

சமீபத்தில் இஸ்லாமிய இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா பேசிய விவகாரம் பூதாகரமாகி உள்ளது. குறிப்பாக நுபுர் சர்மாவிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுக்கத் தொடங்கியுள்ளது.

ஏற்கனவே நுபுர் சர்மா பாரதிய ஜனதா கட்சியிலிருந்து தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்பட்ட போதிலும் அவரை கைது செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இன்றைய தினம் டெல்லி, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், தெலுங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பிற்பகல் தொழுகைக்கு பிறகு இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். 

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் ஹவுரா உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. இதில் போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசுவதும் பாதுகாப்பு படையினர் போராட்டத்தை கலைப்பதற்காக கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தை ஒடுக்க முயற்சி செய்தனர்.

இருப்பினும் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் காரணமாக பதற்றமான சூழல் நிலவுவதால் மாநில போலீசாருடன் இணைந்து மத்திய துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் பெரிய அளவில் பரவாமல் இருக்கவும் சட்டம் ஒழுங்கு காக்கவும் மாநில அரசுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கனவே பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கலாம் என பல்வேறு மாநில அரசுகள் மாநில காவல்துறையை அறிவுறுத்தியுள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சகமும் அனைத்து மாநில அரசுகளையும் உஷார் படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.