ஆரம்பித்தது அடுத்த பிரச்சனை : மங்களூரில் மசூதி இருந்த இடத்தில் சிவன் கோயில்? - கேரள பூசாரியிடம் குறி கேட்ட விஷ்வ இந்து பரிஷத் !!
மங்களூருவில் மசூதி இடத்தில் சிவன் கோயில் இருந்ததாக கேரள பூசாரி குறி பார்த்து கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூரில் கேரள முறைப்படி கட்டப்பட்டிருந்த அசாயத் அப்துல் லாஹில் மதானி ஜும்மா என்ற மசூதி இருந்துள்ளது. பழமையான கட்டடம் என்பதால் புனரமைப்பதற்காக மசூதி நிர்வாகிகள் ஒரு பகுதி கட்டடத்தை இடித்து தள்ளினர்.
இதனையடுத்து அங்கிருந்த மசூதி கட்டடத்தில் கோவில் சாயல் இருப்பதாக இந்துத்துவா அமைப்பினர்கள் குற்றம்சாட்டினர். மேலும் இதுதொடர்பாக மங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அவர்கள், புனரமைப்பு பணி செய்வதற்கும் எதிராக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே தடை உத்தரவு வாங்கியுள்ளனர்.
இதனையடுத்து கேரளாவில் இருந்து கோபால் கிருஷ்ணா பணிகர் என்ற பூசாரியை வரவழைத்து குறிப்பிட்ட இடத்தில் கோவில் இருந்ததா? இல்லையா? என அஷ்டமங்கள பூஜைசெய்து இந்து அமைப்பினர் குறி கேட்டனர். பூஜையை ஆரம்பித்த பூசாரி முன்னொரு காலத்தில் இங்கு சிவன் கோவில் இருந்ததாக தெரிவித்து சர்ச்சையை கிளப்பினார்.
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் நடத்திய இந்த பூஜைக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், மங்களூரு நகரில் 144 தடை உத்தரவு போடப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.