விவகரத்தான ஆண்களை குறி வைத்து - திருமண புரோக்கர்கள் முலம் மோசடியில் ஈடுபட்ட பெண்!!

விவகரத்தான ஆண்களை குறி வைத்து - திருமண புரோக்கர்கள் முலம் மோசடியில் ஈடுபட்ட பெண்!!

விவாகரத்தான ஆண்களை குறி வைத்து திருமண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். பியூட்டி பார்லருக்கு சென்று மேக்கப் போட்டுகொண்டு, இளம் தோற்றத்துடன் பல ஆண்களை ஏமாற்றி வந்த ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர் போலீசாரிடம் சிக்கியது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

ஆவடி அடுத்த முத்தா புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த இந்திராணி. இவரின் மகன் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில் மருமணத்திற்காக பெண் தேடி வந்தனர். தொடர்ந்து  ஆந்திர மாநிலம் திருப்பதி புத்தூர் பகுதியை சேர்ந்த சரண்யா என்ற பெண்ணை இந்திராணி தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்தார்...

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவர் பெயரில் உள்ள சொத்துக்களை தனது பெயரில் எழுதி தரக் கூறி சரண்யா தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே தனது மாமியாரையும் அவர் வீட்டை விட்டு துரத்தியதாக தெரிகிறது. இது போதாது என்று வரதட்சனை கேட்டு மிரட்டுவதாக அவர்கள் மீது ஆந்திரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இந்திராணி ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதன் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஆந்திராவை சேர்ந்த ரவி - சுகுணா தம்பதியருக்கு திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளதனர். அவர்கள் இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். பேரக்குழந்தைகள் பெற்ற சுகுணா திடீரென தனது கணவர் குடும்பத்தினர் மீது வரதட்சிணை புகார் அளித்து அந்த புகாரை வாபஸ் பெறுவதற்காக  10 லட்சம் ரூபாய் சுருட்டிவிட்டு தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டார். 

அப்புறம் தான் ஆரம்பமாகியுள்ளது சுகுணாவின் ஆட்டம்.  தனது தாயுடன் வசித்து வந்த சுகுணா திருமண புரோக்கர்கள் உதவியுடன் விவாகரத்தான ஆண்களை குறிவைத்து ஏமாற்று வேலையில் ஈடுபட ஆரம்பித்தார்.  முதலில் சிக்கியவர் ஒரு ரயில் வே காண்டராக்டர். ஜோலார்பேட்டையை சேர்ந்த ரயில்வே உணவு காண்டராக்டர் சுப்ரமணியன் என்பவருடன் சந்தியா என்ற பெயரில் 11 ஆண்டுகள் குடும்பம் நடத்தி வந்துள்ளார். 

தொடர்ந்து கொரோனா ஊரடங்கின் போது தாய் வீட்டிற்கு வந்த அவர் தனது அடுத்த இலக்கை குறிவைத்துள்ளார். அதன்படி,  திருமண புரோக்கர் மூலமாக ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண் என கூறி இந்திராணி குடும்பத்தினருக்கு சுகுணா அறிமுகமாகியுள்ளார். இந்திராணி குடும்பத்தார் பெண் பார்க்க ஆந்திராவுக்கு வருவதை அறிந்த 54 வயதான சுகுணா பியூட்டி பார்லர் சென்று முடியை ஸ்ட்ரெய்ட்டனிங் செய்து கொண்டு, மேக்கப் போட்டு  35 வயதான இளம் தோற்றத்துடன் மாப்பிள்ளை வீட்டார் முன் தோன்றியுள்ளார்.

அவரது அழகில் மயங்கிய மாப்பிள்ளை வீட்டார் 25 சவரன் நகை வழங்கி தங்கள் மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இவ்வாறு சரண்யா, சந்தியா, சுகுணா என பல பெயர்களில் அவர் மோசடியில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதையடுத்து சுகுணாவை ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து, இவரால் பாதிக்கப்பட்ட நபர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேரக் குழந்தைகளை பெற்றெடுத்த பெண் பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.