தீவிரவாதிகள்  தற்கொலைப்படை தாக்குதல் : மேலும் ஒரு ராணுவ வீரர் பலி !!

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலத்த காயமடைந்த ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது.

தீவிரவாதிகள்  தற்கொலைப்படை தாக்குதல் : மேலும் ஒரு ராணுவ வீரர் பலி !!

75ஆவது சுதந்திர தினம்

நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்திருந்தது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தின் பர்கால் பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாமை குறிவைத்து, 2 தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த முயன்றனர்.

வீர மரணம்

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த ரைபிள்மேன் லட்சுமணன் மற்றும் சுபேதார் ராஜேந்திர பிரசாத், ரைபிள்மேன் மனோஜ்குமார் ஆகியோர் வீரமரணம் அடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 2 தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

படுகாயமடைந்த 3 ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், ரைபிள்மேன் நிஷாந்த் மாலிக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம், தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணமடைந்தோரின் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது.

முதலமைச்சர் இரங்கல்

இதனிடையே, தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், வீரமரணமடைந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளதுடன், அவரது குடும்பத்தினருக்கு 20 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.