விஸ்வரூபம் எடுக்கும் பெகாசஸ் விவகாரம்... ஜூலை 28 ஆம் தேதி விசாரணை...

காங்கிரஸ் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பிரபல பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம் தொடர்பாக,  நாடாளுமன்ற நிலைக்குழு வரும் 28ம் தேதி விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. 

விஸ்வரூபம் எடுக்கும் பெகாசஸ் விவகாரம்... ஜூலை 28 ஆம் தேதி விசாரணை...
இஸ்ரேலைச் சேர்ந்த பெகாசஸ் நிறுவனத்தின் உளவு மென்பொருள் மூலமாக இந்தியாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பிரபல பத்திரிகையாளர்கள் என 300க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாகவும், அவர்களின் போன்களில் இருந்து தகவல்கள் திருடப்பட்டதாகவும் திடுக்கிடும் வெளியாகி உள்ளது.
 
இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் குற்றம்சாட்டி, நாடாளுமன்றத்தில் அமளி செய்து வருகின்றன. குற்றச்சாட்டுகளை ஒன்றிய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இது, இந்தியாவின் வளர்ச்சியை முடக்கும் சர்வதேச சதிச்செயல் என ஒன்றிய அரசு தரப்பில் கூறப்படுகிறது. 
 
ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையிலும் விளக்கம் அளித்துள்ளார். ஆனால், இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு உண்மையை வெளிப்படுத்தும் வரை ஓயமாட்டோம் என அனைத்து எதிர்க்கட்சிகளும் திட்டவட்டமாக கூறி உள்ளன.  
 
இந்நிலையில், பெகாசஸ் ஒட்டு கேட்டு விவகாரம் குறித்த உண்மையை கண்டறிய நாடாளுமன்ற நிலைக்குழு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, காங்கிரஸ் எம்பி சசிதரூர் தலைமையிலான தகவல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நிலைக்குழு வரும் 28ம் தேதி விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. 
 
இது குறித்து வெளியான அறிக்கையில், குடிமக்களின் தகவல் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்து ஆலோசிக்கப்படும் என்றும், தகவல் தொழில்நுட்பத் துறை, உள்துறை, தகவல் தொடர்பு துறை ஆகிய அமைச்சக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்காக சம்மந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.