செஸ் தம்பி வேடத்தில், ஆழ்கடலில் செஸ் விளையாடி வீரர்களை உற்சாகப்படுத்திய நீச்சல் பயிற்சியாளர்...!

செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்றுள்ள வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில், புதுச்சேரியை சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர், தனது குழுவினருடன் ஆழ் கடலில் செஸ் தம்பி வேடத்தில், செஸ் விளையாடி அசத்தியுள்ளார்.

செஸ் தம்பி வேடத்தில், ஆழ்கடலில் செஸ் விளையாடி வீரர்களை உற்சாகப்படுத்திய நீச்சல் பயிற்சியாளர்...!

தமிழக அரசின் சிறப்பான ஏற்பாட்டில், மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28 ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. வரும் 10-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டியில், இந்தியா உள்ளிட்ட 187 நாடுகளைச் சேர்ந்த 2,500 வீரர், வீராங்கனைகள்  பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.  தமிழகத்தில் முதன்முறையாக  சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதால், பல்வேறு தரப்பினரும் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியை வரவேற்று வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புகழ்பெற்ற ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த், செஸ் ஒலிம்பியாட் போட்டியை புதுவிதமாக வரவேற்றுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெம்பிள் அட்வன்ச்சர் என்கிற பெயரில் ஆழ்கடல் பயிற்சி வழங்கிவரும் அரவிந்த் சுதந்திரதினம், உடல் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது  உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு சாதனைகளை கடலுக்கு அடியில் நிகழ்த்தி வருகிறார்.  

இந்நிலையில், சென்னை காரப்பாக்கம் பகுதியில் உள்ள நீலாங்கரை கடலில் சுமார் 60 அடி ஆழத்தில் தனது நண்பர்களுடன் இணைந்து , தற்போது நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், விளையாட்டு வீரர்களை வாழ்த்தும் வகையிலும் செஸ் தம்பி வேடமணிந்து கடலுக்கு அடியில் செஸ் விளையாடி அசத்தி உள்ளார்.