வெளுத்து வாங்கிய கனமழையால் இடுப்பளவு தேங்கிய தண்ணீர்...

டெல்லி, உத்தரப்பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து,  மக்கள் தவித்து வருகின்றனர்.

வெளுத்து வாங்கிய கனமழையால் இடுப்பளவு தேங்கிய தண்ணீர்...

டெல்லி, உத்தரப்பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து,  மக்கள் தவித்து வருகின்றனர்.

தலைநகர் டெல்லியில் காலை முதல் அவ்வப்போது விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் வெளுத்து வாங்கிய கனமழையால், இடுப்பளவுக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. குடியிருப்பு பகுதிகள், சாலைகள் என எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் குடியிருப்பையும் வெள்ளம் மூழ்கடித்துள்ளது.

இதேபோல் ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் பகுதியில் 5 அடி அளவுக்கு தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. சாலைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால், வாகனப் போக்குவரத்து தடைபட்டுள்ளது. மீட்புக் குழுவினர் களமிறக்கப்பட்டு, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். மேற்குவங்கம் மாநிலத்தில் கொட்டித் தீர்த்த மழையால் மேற்கு மிட்னாப்பூர் பகுதியில் மாநில நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.