பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு ஏற்பட்டால் லைசென்ஸ் ரத்து : கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்த உ.பி. அரசு !!

உத்தரபிரதேச மாநிலத்தில் பணி புரியும் இடத்தில் பெண்களின் பாதுகாப்பு கருதி கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது அம்மாநில அரசு.

பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு ஏற்பட்டால் லைசென்ஸ் ரத்து : கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்த உ.பி. அரசு !!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு உத்தரவுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள உத்தரவில்,

தொழிற்சாலை/தொழில் நிறுவனங்களில் பெண் தொழிலாளர் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை பணிபுரிய வேண்டும் என்றால் அவர் எழுத்துப்பூர்வமாக சம்மதம் தெரிவிக்க வேண்டும். 

இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை பெண் தொழிலாளி பணி செய்ய மறுத்தால் அவரை வேலையில் இருந்து நீக்ககூடாது. 

மாலை 7 மணி முதல் காலை 6 மணி வரை வேலை செய்யும் பெண் தொழிலாளர்களுக்கு அவர்களின் இருப்பிடத்தில் இருந்து பணி புரியும் இடத்திற்கு வந்து செல்ல இலவசமாக போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும். 

இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்கு  உணவு வழங்க வேண்டும்.

இரவு நேர பணிக்கு வரும் பெண் தொழிலாளர்கள் பயணத்தின் போதும் அவர்கள் பணி புரியும் நேரத்தின் போதும் அவர்களுக்கான பாதுகாப்பை தொழில் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். 

பெண் தொழிலாளர்கள் பணி புரியும் இடத்தில் கழிவறை வசதி, உடைமாற்றும் அறை, சுத்தமான குடிநீர் மற்றும் போதிய வெளிச்சம் இருக்கும் வகையில் வசதிகள் அமைத்து தர வேண்டும்.

இரவு நேரத்தில் பணி செய்யும் போது தொழிற்சாலையிலோ அல்லது துறையிலோ குறைந்தபட்சம் 4 பெண் தொழிலாளர்களுக்கு மிகாமல் பணியில் அமர்த்தப்பட வேண்டும். 

தொழிற்சாலை அமைந்திருக்கும் இடத்தினை உள்ளடக்கிய மாவட்ட தொழிற்சாலை ஆய்வாளருக்கு மாதாந்திர அறிக்கை தொழில் நிறுவனம் தாக்கல் செய்ய வேண்டும். 

இரவு பணியின்போது பெண் தொழிலாளர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட தொழிற்சாலை ஆய்வாளர் மற்றும் உள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 

பெண் தொழிலாளர்களுக்கு பணி புரியும் இடத்தில் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களை புகாராக தெரிவிக்க புகார் விதிமுறைகளை தொழிற்சாலை நிறுவனர் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். 

இவ்வாறு பணி புரியும் இடங்களில் பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசின் அனைத்து வரையறைகளும் முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அதனை தவறும் பட்சத்தில் தொழில் நிறுவனத்தின் அனுமதி தானாகவே ரத்து செய்யப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்படும் என தலைமை செயலாளர் எச்சரித்துள்ளார்.