கட்டுமான பணியின் போது ஏற்படும் பாலம் விபத்து குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கவலை...

நாடு முழுவதும் கட்டுமான பணியின் போது ஏற்படும் பாலங்கள் விபத்து குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கவலை தெரிவித்துள்ளார். 

கட்டுமான பணியின் போது ஏற்படும் பாலம் விபத்து குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கவலை...

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசின் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சமீபகாலமாக கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் பாலங்கள் சிலவற்றில் விபத்து ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுரை-நத்தம் இடையே கட்டப்பட்டு வரும் மேம்பாலம் விழுந்து ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடு முழுவதும் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் பாலங்களில் ஏற்படும் விபத்துகள் குறித்து கவலை தெரிவித்தார். விபத்துக்கான காரணத்தை கண்டறிய மூத்த பொறியாளர்களுக்கு உத்தரவிட்ட அவர், நிபுணர்களின் உதவியுடன் பால கட்டுமான வேலைகளுக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் வலிமை மற்றும் ஆயுட் காலம் குறித்து ஆய்வு செய்யவும் அறிவுறுத்தினார்.

இச்சம்பவங்கள் மத்திய அரசின் ஒப்பந்த நிறுவனங்கள் மீது அவப்பெயரை ஏற்படுத்தியிருப்பதாக கூறிய அமைச்சர், ஹைட்ராலிக் ஜாக்கி எந்திரத்தில் செயலிழப்பு, கிரேன் பிரச்சனை மற்றும் ஷட்டரிங் தோல்வி போன்ற இயந்திரக் குறைபாடுகளே இத்தகைய தோல்விகளுக்கு முக்கியக் காரணம் என்றும் கூறினார். வேகமான சாலை வடிவமைப்பு மற்றும் கட்டுமான பணிகளில் பாதுகாப்பு மிக அவசியம் எனவும் வலியுறுத்தினார்.