அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை..! முக்கிய வழித்தடங்களில் ரயில்கள் ரத்து..!

அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் முக்கிய வழித்தடங்களில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை..!   முக்கிய வழித்தடங்களில் ரயில்கள் ரத்து..!

ராணுவத்தில் இளைஞர்கள் 4 ஆண்டுகள் சேர்ந்து பணிபுரியும் வகையில் அக்னிபாத் திட்டம் என்ற புதிய திட்டத்தை அண்மையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தினால் தங்களது எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக கூறி பீகார், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ரயில்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டதுடன் ரயில் நிலையங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பீகாரில் துணை முதலமைச்சர் ரேணு தேவி, பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வாலின் வீடுகள் தாக்கப்பட்டன. தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் வன்முறையை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர்.

இதனிடையே வன்முறை காரணமாக நாடு முழுவதும் இன்று 234 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் 95 ரயில்கள் குறுகிய தூரம் மட்டுமே இயக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 11 சரக்கு ரயில்கள் பாதை மாற்றிவிடப்பட்டுள்ளதாகவும் ஒட்டுமொத்தமாக 340 ரயில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.