குடியரசுத் தலைவர்  தேர்தல் : யார் இந்த திரௌபதி முர்மு?

குடிரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு யார்? 

குடியரசுத் தலைவர்  தேர்தல் : யார் இந்த திரௌபதி முர்மு?

ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாய்டாபோசி என்ற கிராமத்தில் கடந்த 1958-ம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி பிறந்தார் திரௌபதி முர்மு. இவரது தந்தை பெயர் பிராஞ்சி நாராயண் டுடு. இவர் சந்தால் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். 

ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள ரமாதேவி மகளிர் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்த திரௌபதி முர்மு, ஆசிரியராக பணிபுரிந்தார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் பிறந்தனர். அவர்களில் மகன்கள் இருவரும் உயிரிழந்துவிட்டனர்.  

சாதாரண கவுன்சிலராக அரசியல் வாழ்க்கையை தொடங்கிய திரௌபதி முர்மு, ராய்ரங்பூர் சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். ஒடிசாவில் பாஜக, பிஜு ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், கால்நடை வளர்ச்சித் துறை அமைச்சராகவும் இருந்தார். 

கடந்த 2015ஆம் ஆண்டு மே 18ம் தேதி முதல் 2021ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி வரை ஜார்க்கண்ட் ஆளுநராக பதவி வகித்தார்.  ஜார்க்கண்ட்டில் ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் மற்றும் ஒடிசாவிலிருந்து ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பழங்குடியின பெண் என்ற பெருமையை பெற்றார். 

இந்த நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.