குஜராத்தில் பாஜகவின் ஆட்டத்தைக் கலைக்குமா ஆஆக!!

குஜராத்தில் பாஜகவின் ஆட்டத்தைக்  கலைக்குமா ஆஆக!!

குஜராத் சட்டசபை தேர்தலுக்காக ஆம் ஆத்மி கட்சி தனது  முழு ஈடுபாட்டை காட்டி வருகிறது.  ஆம் ஆத்மி கட்சி குஜராத்தில் தனது அமைப்பை விரிவுபடுத்தி வருகிறது. பஞ்சாப் சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்றதையடுத்து, குஜராத்தில் களமிறங்கிய ஆம் ஆத்மி கட்சி, மாநிலங்களவையின் எம்.பி., ராகவ் சத்தாவுக்கு, பெரிய பொறுப்பை கொடுத்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி அவரை குஜராத்தின் இணை பொறுப்பாளராக நியமித்துள்ளது. டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு ராகவ் சதா முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைக் கருத்தில் கொண்டு அவர் மீது கட்சி அதிக நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை அளித்துள்ளது.

ராகவ் சதா:

மாநிலங்களவை எம்.பி., ராகவ் சதா, குஜராத்தின் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதையடுத்து, கட்சிக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்த பெரிய பொறுப்பை என்னிடம் ஒப்படைத்த அரவிந்த் கெஜ்ரிவால் ஜிக்கு நன்றி என்று அவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ”எனது கட்சியின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். குஜராத் மாற்றத்தை விரும்புகிறது, குஜராத் நல்ல கல்வி-சுகாதாரத்தை விரும்புகிறது” என்றும் சத்தா கூறியுள்ளார்.  மேலும், “ கெஜ்ரிவாலை குஜராத் விரும்புகிறது” எனவும் கூறியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் இணைப் பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டதை அடுத்து, குஜராத் மாநில கட்சி பிரதிநிதிகளும்  அவருக்கு ட்வீட் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பூஜ்ஜியம் முதல் இருபத்தியேழு வரை:

குஜராத்தின் 2017 சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பங்கேற்றது.  ஆனால், அந்தத் தேர்தலில் அக்கட்சிக்கு மாநிலத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்கவில்லை. இதற்குப் பிறகு, பிப்ரவரி 2021 இல் நடைபெற்ற சூரத் முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலில் குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி 27 இடங்களை கைப்பற்றியது. அந்தத் தேர்தலில் பாஜக 93 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமனம் செய்யும் உரிமை யாருக்கு?!!