ஷிண்டே அணியினருடன் தொடர்பில் உள்ளனரா தாக்கரே அணி எம்பிக்கள்?

ஷிண்டே அணியினருடன் தொடர்பில் உள்ளனரா தாக்கரே அணி எம்பிக்கள்?

சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணியின் 12 எம்.பி.க்கள் ஏக்நாத் ஷிண்டே அணியுடன் தொடர்பில் இருப்பதாக மத்திய அமைச்சர் தான்வே கூறியுள்ளார்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் 12 எம்.பி.க்கள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கோஷ்டியுடன் தொடர்பில் இருப்பதாக மத்திய அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான ராவ்சாகேப் தான்வே கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு பழங்குடியினராக இருப்பதால் சிவசேனா அவருக்கு ஆதரவளிக்கக்கூடும் என்றும் சிவசேனாவின் 12 எம்.பி. க்கள் கட்சியை விட்டு வெளியேறத் தயாராக உள்ளனர் என்றும் மேலும் அவர்கள் ஏக்நாத் ஷிண்டே அணியில் விரைவில் சேரும் வாய்ப்பு உள்ளது என்றும் மகாராஷ்டிராவில் செய்தியாளர்களிடம் பேசிய தான்வே கூறியுள்ளார்.

மொத்தமுள்ள (55) எம்எல்ஏக்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு  இருப்பதால் ஷிண்டே அணியே உண்மையான சிவசேனா என்றும் தான்வே கூறியுள்ளார்.  சிவசேனாவின் வில் அம்பு தேர்தல் சின்னம் எந்த அணிக்கு ஒதுக்கப்படும் என்ற கேள்விக்கு, ஷிண்டே அணிக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் தீர்ப்பளிக்கும் என்று நம்புவதாக அவர் பதில் அளித்துள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு மற்றும் சபாநாயகர் தேர்தலின் போது வாக்களிக்காத  உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த சிவசேனா எம்.எல்.ஏ.க்களுக்கை தகுதி நீக்கம் கோரிய மனுவைத் தொடர வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் ,இச்செய்தி உத்தவ் தாக்கரே அணிக்கு பெரும் ஆறுதல் அளிப்பதாக இருக்கும் எனவும் தான்வே செய்தியாளர் சந்திப்பின் போது கூறியுள்ளார்