சொந்த கட்சியின் கருப்பு பணத்தை கொள்ளையடித்த பாஜக தலைவர்கள்.! -மாநிலத் தலைவரே உடந்தையா?

சொந்த கட்சியின் கருப்பு பணத்தை கொள்ளையடித்த பாஜக தலைவர்கள்.! -மாநிலத் தலைவரே உடந்தையா?

கேரளத்தில் சொந்த கட்சி அனுப்பிய கருப்பு பணத்தையே திருடிய பாஜகவினரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

2014இல் பாஜக ஒன்றிய ஆட்சியை கைப்பற்றிய பின்னர் தொடர்ந்து ஒவ்வொரு மாநிலத்திலும் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகிறது. மேற்கு வங்கத்தில் கூட பிரதான எதிர்க்கட்சி என்ற நிலைக்கு முன்னேறிவிட்டது. ஆனால் பாஜக நுழையவே முடியாத இடங்கள் என்றால் அது கேரளம் மற்றும் தமிழ்நாடு தான். 

கருத்தியல் ரீதியாகவும் சரி, அரசியல் ரீதியாகவும் சரி பாஜக இங்கு வேரூன்றமுடியவில்லை. இந்த மாநிலங்களில் பாஜக நுழைய கடுமையாக போராடி வருகிறது. அப்படி நுழைய செய்த ஒரு காரியம் தான் இப்போது பாஜகவின் இருப்புக்கே ஆபத்தாக வந்து நிற்கிறது. 

கேரள சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு (ஏப்ரல் 3ம் தேதி)  திருச்சூர்-எர்ணாகுளம் நெடுஞ்சாலையில் தனது வாகனத்தை வழிமறித்த கும்பல் ஒன்று அதிலிருந்த ரூ 25 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்று விட்டதாகக் ஷம்ஜீர் ஷம்சுதீன் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

அதைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் புகார் கொடுத்த நபர் கார் ஓட்டுநர் தான் என்றும், திருடு போனது வெறும் 25 லட்சம் அல்ல என்றும், 3.5 கோடி அளவு திருடு போய் இருக்கும் என்றும் கண்டறிந்தனர். இதனால் உஷாரான காவல்துறை மேலும் துருவி விசாரித்ததில் திருடுபோன 3.50 கோடி ரூபாய் பணம் கேரள பாஜகவின் தேர்தல் செலவுக்காக கொண்டு செல்லப் பட்டது என்றும் தெரிய வந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இந்த பணத்தை கொள்ளை அடித்தது உள்ளூர் பாஜகவினர் என்றும். இந்த பணம் திருட்டு தனமாக கர்நாடகத்திலிருந்து கேரளத்துக்கு கொண்டு வரப்பட்ட கருப்பு பணம் என்றும் தெரியவந்தது. இந்த விவகாரத்தில் பாஜக தலைவர்களுக்கு நெருக்கமான  19 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கேரள பாஜக தலைவர் சுரேந்திரனின் உதவியாளர்களும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். 

இதன் உச்சகட்டமாக பாஜகவை சேர்ந்தவரும் பிரபல  நடிகருமான சுரேஷ்கோபியிடமும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது. இந்த சம்பவம் கேரளத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் கேரளத்தை தாண்டி பணத்தை அனுப்பிய கர்நாடக பாஜக வரை செல்லும் என்றும், முக்கிய பாஜக தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.