ஜிஎஸ்டி கவுன்சில் வரி விலக்குகளை நீக்குகிறது!

சத்தீஸ்கர் போன்ற பாஜக அல்லாத மாநிலங்கள் இழப்பீட்டு முறையை நீட்டிக்க வேண்டும் அல்லது ஜிஎஸ்டி வருவாயில் மாநிலங்களின் பங்கை தற்போதைய 50 சதவீதத்தில் இருந்து 70-80 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சில் வரி விலக்குகளை நீக்குகிறது!

பாஜக அல்லாத மாநிலங்கள் வரி வருவாயில் அதிக பங்கு வழங்குவது தொடர்பாக மத்திய அரசுடன் மோதலுக்கு களம் அமைத்துள்ள நிலையில், வரியை நியாயப்படுத்தும் நோக்கில் சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி விகிதங்களில் மாற்றங்களை ஜிஎஸ்டி கவுன்சில் நேற்று அங்கீகரித்துள்ளது. .

ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவின் இரண்டு நாள் கூட்டம்(ஜூன் 28, 29) நேற்று சண்டிகரில் தொடங்கியது.

முதல் நாளில், ஜிஎஸ்டி-பதிவு செய்யப்பட்ட தொழில்கள் ஜிஎஸ்டி விவரங்களை தாக்கல் செய்வது தொடர்பான நடைமுறை சிக்கல்கள் விவாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சில சேவைகள் மீதான ஜிஎஸ்டி விலக்கை திரும்பப் பெறுமாறு பரிந்துரைத்த அமைச்சர்கள் குழுவின் பெரும்பாலான பரிந்துரைகளையும் கவுன்சில் ஏற்றுக்கொண்டது.

கேசினோக்கள், ஆன்லைன் விளையாட்டு மற்றும் குதிரைப் பந்தயஙள் மீதான 28 சதவீத வரியைத் தவிர, விற்பனை வரி (வாட்) போன்ற வரிகளால் மாநிலங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை தேசிய ஜிஎஸ்டியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை கவுன்சிலில் இன்று விவாதிக்க வாய்ப்புள்ளது.


சத்தீஸ்கர் போன்ற பாஜக அல்லாத ஆளும் மாநிலங்கள் இழப்பீட்டு முறையை நீட்டிக்க வேண்டும் அல்லது ஜிஎஸ்டி வருவாயில் மாநிலங்களின் பங்கை தற்போதைய 50 சதவீதத்தில் இருந்து 70-80 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ், ஜூலை 1, 2017 அன்று சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்ட்து. ஜிஎஸ்டி செயலுக்கு வந்த முதல் ஐந்து ஆண்டுகளில் மாநிலங்களுக்கு ஏதேனும் வருவாய் இழப்பு ஏற்பட்டால் முழு இழப்பீடு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது.

கவுன்சில் எடுக்கும் முடிவுகள் மாநிலங்களை கட்டுப்படுத்தாது என்றும், ஒருமனதாக எடுக்கப்படாத எந்த முடிவும் முக்கிய பொருளாதார சீர்திருத்தத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பை மாநில அரசுகள் மேற்கோள் காட்டி தங்கள் கருத்தை முன்வைத்தன.

நேற்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள் குழுவின் அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பெரு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் தயிர், லஸ்ஸி, பொரி மற்றும் கோதுமை மாவு ஆகியவற்றின் மீது 5 சதவீத ஜிஎஸ்டியை பரிந்துரைக்கப்பட்டது.

தற்போது, ​​பிராண்டட் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது, அதே சமயம் பேக் செய்யப்படாத மற்றும் லேபிளிடப்படாத உணவுப் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சமையல் எண்ணெய், நிலக்கரி, எல்இடி விளக்குகள், அச்சு மை, முடிக்கப்பட்ட தோல் மற்றும் சோலார் வாட்டர் ஹீட்டர் உள்ளிட்ட பல பொருட்களுக்கான வரி விதிப்பிலும் திருத்தம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதிக ஆபத்துள்ள வரி செலுத்துவோர் பயோமெட்ரிக் அங்கீகாரம் மற்றும் வங்கிக் கணக்குகளின் நிகழ்நேர சரிபார்ப்பு ஆகியவற்றைப் பரிந்துரைத்த ஜிஎஸ்டி அமைப்பு சீர்திருத்தங்கள் குறித்த மாநில நிதி அமைச்சர்களின் அறிக்கை கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டது.

தற்போது வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள ரூ.1000க்கு கீழ் வாடகைக்கு விடப்படும் விடுதி அறைகளுக்கு 12 சதவீத வரி விதிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கவுன்சில் கூட்டத்திற்காக சேகரிக்கப்பட்ட வருவாய் வளர்ச்சி குறித்த தரவுகளின்படி, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் சிக்கிம் ஆகிய 31 மாநிலங்களில் ஐந்து மாநிலங்கள் மட்டுமே 2021-22 நிதியாண்டில் ஜிஎஸ்டியின் கீழ் மாநிலங்களுக்கான பாதுகாக்கப்பட்ட வருவாய் விகிதத்தை விட அதிக வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

மாநிலங்களுக்கு இடையேயான தங்கம், தங்க நகைகள் மற்றும் விலைமதிப்பற்ற கற்கள் விற்பனை செய்யும் போது நிகழும் வரி ஏய்ப்பைத் தடுக்க இ-பில் கட்டாயமாக்குவது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்யலாம் என்றும் கவுன்சில் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரைக்கு மாநில  அமைச்சர்களின் குழு 2 லட்சம் மற்றும் அதற்கும் மேலான விற்பனைக்கு இதை நடைமுறைப்படுத்தலாம் என்ற வரம்பை பரிந்துரைத்தது.

செய்தித் தொகுப்பு : ஜோஸ்