குஜராத்தில் அதிகரிக்கும் தேர்தல் ஜுரம்..! முதல்கட்ட தேர்தல் இன்று..!

குஜராத் சட்டசபைத் தேர்தலில் முதற்கட்டமாக 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
குஜராத் தேர்தல்:
குஜராத்தில் உள்ள 182 தொகுதிக்கும் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இரண்டாம் கட்டமாக டிசம்பர் 5-ம் தேதி 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. அதன்பின் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டி:
இந்த நிலையில் இன்று நடைபெறும் முதற்கட்ட தேர்தலில் மொத்தம் 788 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதில், 339 சுயேட்சை வேட்பாளர்களும், 70 பெண்களும் களத்தில் உள்ளனர். குஜராத்தைப் பொறுத்தளவு பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. முதல் கட்ட தேர்தலில் பாஜக , காங்கிரஸ் கட்சிகள் 89 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி 88 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி 57 தொகுதிகளிலும், பாரதிய பழங்குடியினர் கட்சி 14 தொகுதிகளிலும், சமாஜ்வாடி கட்சி 12 தொகுதிகளிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி 4 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
இதையும் படிக்க: இனி இப்படி தான் பொங்கல் பரிசு வழங்கப்படுமா..!!
வாக்குசாவடிகள்:
இதில், இன்றைய வாக்குப்பதிவுக்காக 25,430 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், காலை 8 மணிக்குத் தொடங்கும் வாக்குப்பதிவு, மாலை ஐந்தரை மணி வரை நடைபெறுகிறது. இதற்கிடையில், மாநிலத்தில் அமைதியான நிலையைத் தக்கவைக்க துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 38,749 வாக்கு ஒப்புகை சீட்டு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரத்து 288 பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
பறிமுதல்:
இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், குஜராத்தில் 750 கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கப்பணம், தங்க நகைகள் மற்றும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்தத் தகவல் குஜராத் தேர்தல் களத்தில் பல சர்ச்சைகளைக் கிளப்பி விட்டுள்ளது. தொடர்ந்து பேசிய அவர், குஜராத்தில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.